வசந்தா பதிப்பகம், கதவு எண்.26, ஜோசப் குடியிருப்பு, ஆதம்பாக்கம், சென்னை-88. (பக்கம்: 296. விலை: ரூ.110)
`திருத்திய பண்புந் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூயமொழி புகல் செம்மொழியாம்' என்பது இலக்கணம். இம்மொழி நூல் இலக்கணம் நம்முடைய தமிழ் மொழியின் கண்ணும் அமைந்திருந்தல் தோற்றம்... (பக்.160) ஆகவே, தென்னாட்டின்கண் சிறந்தொளிராநின்ற நம் அமிழ்தினும் இனிய தமிழ்மொழி எவ்வாற்றானாராய்ந்த வழியும் உயர் தனிச் செம்மொழியே யாம் என்பது திண்ணம்' என்று தமிழ் மொழிக்குச் செம்மொழி தகுதி கோரி குரல் கொடுத்து வி.கோ.சூரியநாராயணன் சாஸ்திரி என்னும் தம் பெயரைத் தமிழில் `பரிதிமாற் கலைஞர்' என்று மாற்றிக் கொண்ட தமிழறிஞர் படைத்த 12 படைப்புகளுள், `தமிழ் மொழியின் வரலாறு' (பத்து கட்டுரைகள் கொண்டது) `தமிழ் வியாசங்கள்' (பல இதழ்களில் வெளியான தமிழ் மொழி, சொல் ஆய்வுக் கட்டுரைகள் மொத்தம் 18 கொண்டது) புதுவது புனைந்தோர் செந்தமிழ்க் கதை 1897ல் `ஞானபோதினி'யில் தொடங்கப்பட்ட `மதிவாணன்' (ஒன்பது அத்தியாயங்கள் கொண்ட முழுக்கதை) ஆகிய மூன்றும் இத்தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.
`பாஷையின் தோற்றமும் தொன்மையும்,' `பாஷையின் சிறப்பியல்பு,' `பாஷையின் சீர்த்திருத்தம்' போன்ற கட்டுரைகள் பரவலாக்கப்பட வேண்டியவை. பரிதிமாற்கலைஞரின் திறனுக்குச் சான்றாய் விளங்கும் தமிழ் வியாசங்கள் ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படக்கூடிய பல தகவல்களைக் கொண்டுள்ளன. `அகராதி'யென்று வழங்குஞ்சொல்"அகாராதி"யென்றிருத்தல் வேண்டும் என்பது பலருடைய கொள்கை (பக்.183) `தமிழ் கற்பிக்கும் முறை வேறு' ஆங்கிலப் போதனா முறை இதற்கு உதவாது என்பதை விளக்க வேண்டும் (202) போன்ற பாட போதனைக் கருத்துக்களும் நாம் மறந்து போனவை.
பரிதிமாற் கலைஞரின் இலக்கியச் செறிவுமிக்கப் படைப்பான மதிவாணன் செந்தமிழ் செம்மாந்து நடைபோடும் சிற்றிலக்கியமாய் உள்ளது. பழந்தமிழ் நூல்களைப் படிக்க இயலாதவர்கள் இப்படிப்பட்ட தொகுதிகளைப் படித்தாவது தம்மைத் தகுதியுள்ளவர்களாக்கிக் கொள்ளலாம். கட்டுரைகள் வெளியான ஆண்டுகளை வெளியிட்டிருந்தால் ஆய்வாளர்களுக்கு உதவியாக இருக்கும். பயனுள்ள தொகுப்பு.