நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 640.)
நல்ல நூல்களுக்காகத் தரப்படும் தொகை செலவல்ல - மூலதனம்! அத்தகைய வரிசையில் வீட்டில் வைத்து பாதுகாத்து பயில வேண்டிய நூல்களில் இதுவும் ஒன்று. இந்நூலுக்கான முகவுரை எனப்படும் ஷ்ரீமுகம் பரமாச்சார்யர் கருத்தாகும். அவர் அதில் `வேதத்தில் சுருக்கமாக, சின்னச் சின்னதாகப் போட்டிருக்கிற தர்மவிதிகளை கதைகள் மூலம் பெரிசு பண்ணிக் காட்டுவது தான் புராணம்' என்றிருக்கிறார்.
இந்நூலில் ஷ்ரீ பிரம்ம புராணம் ,பத்ம புராணம், விஷ்ணு புராணம், சிவ புராணம், லிங்க புராணம், கருட புராணம், நாரத புராணம், பாகவத புராணம், கிருஷ்ணாவதாரம், அக்னி புராணம், கந்த புராணம், பவிஷ்ய புராணம், பிரம வைவர்த்த புராணம், மார்க்கண்டேய புராணம், வாமன புராணம், வராக புராணம், மச்ச புராணம், கூர்ம புராணம், பிரம்மாண்ட புராணம், வாயு புராணம் ஆகிய புராணங்கள் சிறு சிறு உப தலைப்புகளுடன் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன.
நமக்கு தெரியாதது, அறிய முடியாதது எல்லாம் பொய்யென்பது நியாயமில்லை. அதேபோல் புராணத்திலே நம்ப முடியாதது என நாம் தள்ளி விடும் விஷயங்கள் அவ்வப்போது நம் காலத்திலேயே கண் முன் நடந்தும் விடுகிறது.
பொதுவாக தற்போதுள்ள புராணங்கள் கி.பி.300க்கும் கி.பி.1000க்கும் இடைப்பட்ட காலத்தில் உருவானவை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
எண்ணற்ற வம்சங்கள், அரசர்கள், சிவ, விஷ்ணு, பிரம்ம புராணங்கள் மற்றும் எண்ணற்ற தகவல் களஞ்சியமாக இந்நூல் விளங்குகிறது.
அக்னி புராணத்தில் காயத்ரி மந்திர ஜபம் மற்றும் பல்வேறு அபிஷேக பலன்கள் விளக்கப்பட்டுள்ளன.
கருட புராணத்தில் தான தர்ம சிறப்புகளும், உயிர் பிரிதல், மறுபிறவி, உடலியல் குறித்த விளக்கங்கள், சித்ரகுப்தன் கணக்கும், நரகங்களும், பல்வேறு வகையான பாபங்கள், அவற்றிற்கான தண்டனைகள் விளக்கப்பட்டுள்ளன. இதில் சில தகவல்களை தற்போது சினிமாவில் எடுத்துக்காட்டி விளம்பரம் தரப்பட்டிருப்பதால் அனைவருக்கும் இப்புராணத்தின் பெயர் தெரிந்திருக்கும்.
இந்நூலில் உள்ளவற்றை பட்டியலிடுவது மிகவும் கடினம். அதை விட நூலை வாங்கிப் படிப்பது பயன் தரும். ஏனெனில், முன்னோர்கள் அறிவார்ந்த சிந்தனை கொண்டவர்கள் என்பதை விளக்கும் வகையில் தகவல்கள் இந்த நூலில் தரப்பட்டுள்ளன.