மா.ரா. அரசு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாவது முதன்மைச் சாலை, சி.ஐ.டி., வளாகம், தரமணி, சென்னை-600 113. (பக்கம்: 386.)
தமிழிலக்கிய வரலாற்றில் மிக முக்கிய இடம் இலக்கிய இதழ்களுக்கு உண்டு. இலக்கிய வளர்ச்சிக்கு இவை ஆற்றிய பங்கு மகத்தானது. பழந்தமிழ் இலக்கியங்களை மக்களுக்கு அறிமுகம் செய்ததுடன், புதிய இலக்கிய வகைகளையும், கவிஞர்கள், எழுத்தாளர்கள் போன்ற படைப்பாளிகளையும் அறிமுகம் செய்த பெருமை இலக்கிய இதழ்களையே சாரும். 1935 முதல் 1991 வரை 55 ஆண்டுகளில், மகாகவி பாரதியாரின் `கவிதா மண்டலம்' தொடங்கி, `சுபமங்களா' வரை மகத்தான இலக்கியப் பணிபுரிந்த பதினேழு இதழ்களைப் பற்றிய விரிவான ஆய்வு நூலாக இது வெளிவந்துள்ளது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், வரலாற்றறிஞர் டாக்டர் மா.இராசமாணிக்கனாரின் இதழியல் ஆய்வு மையத்துடன் இணைந்து நடத்திய தொடர் கருத்தரங்கில், பல்வேறு இலக்கியப் பிரமுகர்களும், பேராசிரியர்களும் விரிவான ஆய்வுடன் எழுதி வாசித்த கட்டுரைகளே இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. மஞ்சரி, தீபம், கணையாழி, ஞானரதம், தென்றல் என ஒவ்வொரு பத்திரிகையின் சாராம்சமும் அதன் பாணியும், அவை அறிமுகம் செய்த படைப்பாளிகள் பற்றியும் ஏராளமான, சுவையான தகவல்கள் ஒவ்வொரு கட்டுரையிலும் நிறைந்து கிடக்கின்றன. இதழியல் மாணவர்களுக்கும் இலக்கிய ஆர்வலர்களுக்கும் புதையல், பொக்கிஷம் போன்ற நூல் இது. கருத்தரங்கத் தொடக்கவுரையான கார்த்திகேசு சிவத்தம்பியின் கட்டுரையும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க விஷயம். அரிய செய்திகளின் சுரங்கம் எனலாம் இத்தொடக்கவுரையை.