காவ்யா, 14, முதல் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 208.)
நவீன இலக்கியத்தில் ஈடுபாடும் ஆர்வமும் உடைய தமிழ் விரிவுரையாளர் கோ.கண்ணன், தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வேட்டை நூல் வடிவில் வெளிக் கொணர்ந்திருக்கிறார். தமிழில் வெளிவந்துள்ள பிரபல எழுத்தாளர்களின் மிகச் சிறந்த நாவல்களில் காணப்படும் `தலைமுறை இடைவெளி'யை தனது ஆய்வுக்காக எடுத்துக் கொண்டு முனைவர் பட்டமும் பெற்றிருக்கிறார். 41 நாவல்களை இவர் ஆய்வு செய்திருக்கிறார். சிவசங்கரியின் `பாலங்கள்,' நீலபத்மநாபனின் `தலைமுறைகள்,' ஜெயகாந்தனின் `ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்,' ஆகிய நாவல்களில் இவர் செய்துள்ள ஆய்வு குறிப்பிட்டுச் சொல்லத்தக்க வகையில் அமைந்துள்ளது. துணை நூற்பட்டியலில் இடம் பெற்றுள்ள புத்தகங்கள் அனைத்தும் இவருடைய ஆய்வுக்கு பெருந்துணை புரிந்துள்ளதை புத்தகத்தைப் படிக்கும்போது நாம் நன்கு உணர்கிறோம்.
தர்மபுரி மாவட்டத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பார்வையற்றவர் என்ற குறிப்பு நமது கவனத்தைக் கவர்கிறது. `காவ்யா' புத்தகத்தை நன்கு தயாரித்துள்ளனர். பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களுக்கு இந்தப் புத்தகம் பல வகையிலும் உதவும்.