: நூலாசிரியர்: நெல்லை சு.முத்து. வெளியீடு: அருள் பதிப்பகம், 68, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர்,
சென்னை-78. (பக்கம்: 204)
இலக்கியங்களில் காணப்படும் அறிவியல் செய்திகளைத் தரும் 20 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். `அனைவருக் கும் முன்னோடி அப்துல் கலாம்' என்னும் இரண்டாவது கட்டுரை அப்துல் கலாமின் வாழ்க்கையைச் சுருக்கமாக வழங்குகிறது. `வானத்தை அளப்போம்' எனும் தலைப்பில் அமைந்துள்ளது ஓர் உரையாடல். வானொலி நிலையத்திற்கு வழங்கிய நேர்காணல் அப்படியே வெளியிடப்பட்டுள்ளது. `திருக்குறள் வழி அறிவியல் கற்போம்' என்னும் கட்டுரை திருக்குறளில் காணப்படும் அறிவியல் செய்திகளைத் தொகுத்துத் தருகிறது. அறிவியல் கலைச் சொற்களை எவ்வாறு தமிழாக்கம் செய்ய வேண்டும் என்பதற்குப் பாரதியின் கட்டுரைகளிலிருந்து விளக்கம் அளித்துள்ளார் நெல்லை சு.முத்து.
அறிவியல் நடப்புகள், சில அறிவியல் பதிவுகள் என்னும் கட்டுரைகள் அறிவியல் தொடர்பாக நடந்த விழாக்களை அறிவிக்கின்றன. நூலாசிரியர் வழங்கிய அணிந்துரைகள், மதிப்புரைகள் ஆகியவற்றையும் கொண்டதாக இந்த நூல் வெளிவந்துள்ளது. மொத்தத்தில் அறிவியலையும் இலக்கியத்தையும் கலந்து இந்த நூல் ஒரு பல்சுவை விருந்தை வழங்குகிறது.