ஆர்.வி., பதிப்பகம்,
(பக்கம்: 120).
ஏவூர்தியிலை அனைவருக்கும் புரியும்படி தமிழில் எழுத வேண்டுமெனில் ஆசிரியனுக்கு அடிப்படை இயற்பியல் மற்றும் விசையியல், வெப்ப இயல், வேதியியல் இவற்றில் ஆழ்ந்த புலமையும், தமிழில் ஈடுபாடும் கலைச் சொற்களில் சொல்லாளுமையும் இருக்க வேண்டும்.
இவை அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றவர் நெல்லை. சு.முத்து என்பதற்கு அவர் எழுதி ஆர்.வி., பதிப்பகம் வெளியிட்டுள்ள `ஏவூர்தியியல்' ஓர் மிகச் சிறந்த சான்று.எந்த ஒரு அறிவியல் சார்ந்த விஷயத்தையும் சொல்ல முற்படும் பொழுது, அதனுடைய வரலாற்றை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை அனைத்து சான்றோர்களும் முக்கியமாகக் கருதுகின்றனர். அதற்கேற்ப ஆசிரியர் முதல் அத்தியாயத்தில், ஏவூர்தியல் வரலாற்றை தொன்மை வாய்ந்த சங்க இலக்கியங்களில் இருந்து ஆரம்பித்து, தற்காலம் வரை ஏற்பட்ட வளர்ச்சிகள் வரைத் தொகுத்துக் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, ஏவுகணை வகைகள் அவற்றின் பொறி, இவைகளைப் பற்றி விரிவாக, நேர்த்தியான கலைச் சொற்களைப் பயன்படுத்தி, விவரிக்கிறார். இந்த இரண்டு அத்தியாயங்களை உன்னிப்பாகப் படித்தால், மாணவர் சமுதாயம் மட்டுமின்றி சாதாரண மக்களும் இதில் பரந்து விரிந்து அடங்கியுள்ள நவீன தொழில் நுட்பங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். அத்தியாயங்கள் 4, 5, 6ல் ஏவூர்தி பொறியின் அடிப்படைகள் தத்துவங்கள் இயற்பியல் அடிப்படைகள் மற்றும் அதற்குரிய சமன்பாடுகளை மிக எளிதாக தெளிவாக விவரித்துள்ளனர். இச்சமன்பாடுகளை எளிதில் புரிந்து கொள்ளும்படி எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்தியாயம் 7 மற்றும் 8ல், பொறியில் ஏற்படும் விளைவுகளையும், அவற்றைத் திறமையாகக் கையாளும் முறைகளையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
அத்தியாயங்களின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணைகள், எளிதில் தொழில் நுட்பங்களைப் பற்றிய விவரங்களை மனதில் நிறுத்த மிகவும் உதவியாக இருக்கும். முடிவாக ஏவூர்தி பொறி வகைகளை விளக்கும் பொழுது தற்காலத்தில் பயன்பாட்டில் இருக்கும் பொறிகளை மட்டுமின்றி எதிர்காலத்தில் உபயோகப்படக் கூடிய வகைகளையும் கோடிட்டுக் காட்டி உள்ளது இவரது ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்துகிறது. புத்தகத்தில், தமிழ் மணம் கமழ்கிறது. இந்நூலை ஒவ்வொரு இயற்பியல் மாணவனும் இத்துறையில் ஆர்வமுள்ள சாதாரண மக்களும் படித்துப் பயன் பெற வேண்டும். இடங்களின் பெயர்களைத் தமிழில் மாற்றம் செய்வதைத் தவிர்த்திருக்கலாம். உதாரணமாக, "White Sands Proving Ground' என்பதை `வெள்ளை மணல் நிரூபணத் தளம்' என்று மொழிபெயர்த்ததற்குப் பதிலாக, `ஒயிட் சேண்ட்ஸ்' நிரூபணத்தளம் என்றே குறிப்பிட்டிருக்கலாம்.
இந்நூல், இறுதியில் தொகுக்கப்பட்டுள்ள கலைச் சொற்களாலும் விரிவான விஷய ஞானத்தினாலும், எல்லா நூலகங்களிலும் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் அவசியம் இருக்க வேண்டியதென்பதில், மாறுபட்ட கருத்து இருக்க முடியாது.