ஏ.திவ்யதர்ஷினி, நர்மதா பதிப்பகம், சென்னை-17. (பக்கம்:284)
நோயாளிகளுக்கு, செவிலியர் தாய்க்குச் சமமானவர். பரிவும் கவனிப்பும் புத்துணர்வையும் புதுப் பொலிவையும் தரும். இத்தகைய புனிதம் மிக்க செவிலியர்களுக்கான நெறிமுறைகளை, அணுகுமுறைகளை இந்நூல் எடுத்தியம்புகிறது.
தேவையான பண்புகள்(பக்.6), தேவையான பொருட்கள் (பக்.16), கவனிப்பு (பக்.21), காலை - மாலை பணிவிடைகள் (பக்.24), நோயாளி உளவியல் பாதுகாப்பு (பக்.29), படுக்கைப் புண், திட்டமிட்ட உணவு, உடற்பயிற்சி, முதலுதவி, ஊசி போடும் முறை (பக்.94). என்பவை முதல் பகுதியில் 51 தலைப்புகளில் இடம் பெறுகின்றன.பேச்சுக்கோளாறு (பக்.110), உள நோயாளி (பக்.115), என எட்டு தலைப்புகள் இரண்டாம் பகுதியிலும், காக்கா வலிப்பு ஹிஸ்டீரியா உட்பட மயக்க மருந்து சிகிச்சை தொடர்பாக 10 தலைப்புகள் மார்ஃபினிஸம் என்ற மூன்றாவது பகுதியிலும், காது, மூக்கு, தொண்டை நோய்கள் 29 தலைப்புகளில் நான்காவது பகுதியிலும் இடம் பெறுகின்றன.முன்பெல்லாம் மருத்துவர்கள் மட்டும் நோய் பற்றி அறிவர். இப்போது மருந்து விற்பவர், சிகிச்சைக்கு பணிவிடை செய்பவர் ஏன்... நோயாளி உட்பட நோயின் மூலம் எது? எப்படி வருகிறது... என்ன விடிவு... என்ன செய்ய வேண்டும் என எல்லாவற்றையும் தெரிந்து வைத்துள்ளனர். இது காலத்தின் கட்டாயம்.செவிலிய படிப்பு படித்தவர் மட்டுமல்ல, நோயாளிக்கு பணிவிடை செய்யும் எவரும் அறிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் எளிய தமிழில், அழகான அச்சு அமைப்பில், எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.செவிலிய பயிற்சி பெறுபவருக்கும், பணி புரிபவருக்கும், வீட்டில் இருந்து கொண்டு நோய் வாய்ப்பட்டவருக்கு பணிவிடை செய்பவருக்கும் இந்நூல் பெரிய பொக்கிஷம்!