நூலின் பெயர்:உடன்படு சொல்(பேச்சும் உரைவீச்சும்). ஆசிரியர்:மாசிலா.அன்பழகன். பக்கங்கள்:311.நூலாசிரியர் மா.அன்பழகன் சிங்கப்பூர் மூத்த எழுத்தாளர், கவிஞர்களுள் ஒருவர்.பல்வேறு இலக்கிய நிகழ்வுகளில் ஆற்றிய தலைமை உரை, அறிமுக உரை, சிறப்புரை ஆகியவைகளின் தொகுப்பே இந்நூல். சில கவிதைகளாக, சில உரைநடைகளாக மலர்ந்துள்ளன. எமது கவிதையில் யாப்பிலக்கணம் பார்க்க முடியாது. தமிழ்க் காப்பிலக்கணமாய், மனதைத் தைக்க வைப்பதாய்-சிந்தனைகளைக் கிளர வைப்பதாய், சுவைக்க வைப்பதாய், மனக்கண்ணாடியில் கீறலாய்-மறக்க முடியாத கல்வெட்டாய் நிலைத்து நிற்க வேண்டும் என்கிறார் ஆசிரியர். மனதைத் தைத்திருக்கிறது. ஆசிரியரின் கூற்று மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. ஜன்னல் வைத்து வீடு கட்டுங்கள், கல்லறை கட்டி விடாதீர்கள் என்று வளரும் கவிஞர்களுக்கு அறிவுரை வழங்கியிருப்பது சரியே. நூல் முழுவதும் தமிழ்,தமிழினம், தமிழர் முன்னேற்றம் என்ற கருத்துக்கள் விரவிக் கிடக்கின்றன. சிங்கப்பூரின் இலக்கிய வரலாற்றுப் பெட்டகம் என்று கூடக் கூறலாம். குறையையும் சொன்னால்தான் விமர்சனம் நிறைவுபெறும் என்றும் நூலாசிரியர் குறிப்பிட்டிருக்கிறார்.துருவித் துருவிப் பார்த்தேன்.ஒற்றுப் பிழைகள் கூட இல்லாமல் கவனத்தோடு கனத்த அட்டையில் புத்தகத்தை அச்சிட்டு,புதிய உத்தியைக் கையாண்டு பாராட்டைப் பெற்ற குறை மிஞ்சியிருக்கிறது. உடன்படு சொல் எல்லோருக்கும் பயன்படும் சொல்.