நூலாசிரியர்: தமிழண்ணல். வெளியீடு: நோக்கு, கொட்டிவாக்கம், சென்னை-96. (பக்கம்: 75. விலை: )
நூலாசிரியர் தமிழண்ணல் நாடறிந்த தமிழறிஞர். கடல் கடந்த நாடுகளில் வாழும் தமிழர்களது நெஞ்சில் நமது செந்தமிழ்ப் புலமையால் அழியா இடத்தைப் பெற்ற அருந்தமிழறிஞர்; தமிழ்ப் பொழிவாளர்; நூலாசிரியர்; ஆய்வாளர்; நல்லாசிரியர். ஆய்வியல், ஒப்பியல், இலக்கியக் கொள்கையியல், தமிழ் இலக்கிய வரலாற்றியல் போன்ற புதிய துறைகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்த செந்தமிழ் அறிஞர்களுக்குள் மூத்தவர்; முதுபெரும் பேரறிஞர்.
சங்கப் பாடல்கள் கி.மு. ஐந்து, நான்காம் நூற்றாண்டுகளில் பாடப்பட்டவை என்பதை நிறுவ, காய்தல் உவத்தல் இல்லாது அரிது முயன்று தக்க சான்றுகளை இந்நூலில் பதிவு செய்துள்ளார்.
"தொல்காப்பியம் பனம்பாரனார் பாயிரம்' எனத் துவங்கி, "தமிழர்களின் கடல் வணிகச் சிறப்பு' என, 17 தலைப்புக்களில் தமிழ் இலக்கிய ஆய்வுச் செய்திகளை பதிவு செய்துள்ளார். நூலில் உள்ள ஒட்டு மொத்தமான செய்திகளை கோர்வையாக தொகுப்புரை என்ற தலைப்பில் பதிவு செய்திருப்பது ஓர் சிறப்பு.
"பாரத நாட்டை ஒரே நாடாகப் பார்க்கும் பார்வை ஆங்கிலேயர்கள் வருவதற்கு 2000 ஆண்டுகட்கு முன்பே தமிழிலக்கியங்களில் காணப்படுகிறது' (பக்கம்:38).
"இந்திய வரலாற்று ஆசிரியர்களால் தமிழின வரலாறு மறைக்கப்பட்டு, மறக்கப்பட்டு விட்டது. ஒரு சில உண்மை சொன்னவர்களையும் நாம் கண்டு கொண்டோமில்லை' (பக்கம்: 68).
என, இதுபோன்ற பல ஆய்வுக் குறிப்புக்கள் நிறைந்துள்ளன. சங்கப் பாடல்களின் கால ஆய்வாளர்களுக்கு இந்நூல் ஓர் கையேடு.