அகிலா பதிப்பகம், 16, சாலமன் தெரு, கணபதிபுரம், கிழக்கு தாம்பரம், சென்னை-59. (பக்கம்: 64.)
அனுமன் ஒருவனே வாயு புத்திரன் எனப் பெரும்பாலும் அறியப்படும்போது, மற்றோர் புராணமான மகாபாரதத்தில் வாயுதேவனின் அருளால் குந்திதேவிக்கு பீமன் பிறந்திட இருவருமே வாயு புத்திரர்கள் ஆவர்! சின்னஞ்சிறிய இந்நூலில், சரிபாதி இவ்விருவருக்கும் தரப்பட்டு, அவர்களது குணவியல்புகள், நிறை - குறைகள் யாவும் சுருங்கக் கூறப் பட்டுள்ளன.
இருவருமே அளப்பரிய பலசாலிகள், ஆற்றல் மிக்கவர்கள் என்ற போதிலும், அனுமன் சொல்லின் செல்வன், அறிவின் சிகரம், உயிர் தந்த வள்ளல் என்பதனாலேயே மாமேரு போன்று வானளாவி நிற்பது கண்கூடு! மாறாக, பீமன் செயல் வேகம் பெற்ற அளவிற்கு விவேகம் இல்லாதவன் என அறியப்பட்ட போதிலும், அநீதி இழைப்போர் எவ்வகையிலும் தண்டிக்கப்பட வேண்டுமென்ற வைராக்கியமும், பிறன் மனை நோக்கா பேராண்மை படைத்தவன் (பக்.56) போன்ற சீரிய பண்பு
களும் அவனிடம் குடி கொண்டிருந்தன.
பிரமதேவனின் பதவிக்காலம் முடிந்த பின்னர் அனுமனே அந்தப் பதவி ஏற்றிடுவன் என ராமர் அருளியது (பக்.24) போன்ற வியப்புமிகு செய்திகளும் இந்நூலில், இடம் பெறுகின்றன.
பள்ளி மாணவ, மாணவியர் நன்னெறிகளை அறிந்து கொள்ளவும், நற்பண்புகளைப் பேணி, வளர்த்துக் கொள்ள, இந்நூல் உதவிடும். கண் கவர் முகப்பு அட்டை தாங்கிய இந்நூலில், எழுத்துப் பிழைகள் மலிந்திருப்பது ஏனோ.