அலைகள் வெளியீட்டகம், சென்னை-24. (பக்கம்: 140.)
விண்ணைத் தொடும் உயரம் கொண்ட புகழ்மிக்க காப்பியங்கள்; படித்தவர், பண்டிதர் போன்றோரால் எடுத்துக் காட்டப்படுகின்றன.
மண்ணில் புழுதியோடு கலந்து வாழும் படிக்காத பாமர மனிதரின், கலை இலக்கியப் பண்பாடுகளை "பாமர இலக்கியம்' என்று உயர்த்திக் காட்டும் சிறப்புக்கு விதையிட்டவர் பேராசிரியர் நா.வானமாமலை. இவரது நாடோடி இலக்கிய ஆய்வு 50 ஆண்டுகளாக பல்கலைக்கழகங்களையே, பாமர மனிதனைத் தேடிப் போகச் செய்திருக்கிறது. இத்தகு நா.வா., அவர்களின் நாட்டுப் பாடல்கள் பற்றிய விளக்கமும், பள்ளுப் பாட்டு, வில்லுப்பாட்டு, நாட்டுப்புறக் கதைப் பாடல்கள் பற்றிய ஆய்வும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
நாட்டுப்புறப் பாடல்கள் இலக்கணத்திலிருந்து விடுதலை பெற்றவை. உணர்ச்சியின் உண்மையான வெளியீடானவை. தொல்காப்பியத்தில் தலைவனைப் பிரிந்த தலைவிக்கு ஆறுதல் கூறும் செவிலியின், "பண்ணத்தி' நாடோடி இலக்கியம் என்று இந்நூல் விளக்குகிறது.
உழவர், மீன்பிடிப்பவர், ஏற்றமிறைப் பவர், படகோட்டிகள், நாடோடிகள் இவர்கள் பாடுவதே இந்த நாட்டுப் புறப்பாடல்கள்.
பள்ளு இலக்கியம் உழவின் சிறப்பைப் பாடுகிறது.
முக்கூடற்பள்ளு, மனமோகனப் பள்ளு, திருக்கோட்டியூர், திருப்பத்தூர் பிள்ளேசல் முதலியன சிற்றிலக்கிய வகைகளில் சிறந்தன.
வில்லுப்பாட்டில், முத்துப்பட்டன் வில்லுப் பாட்டுக் கதை, கிராமங்களில் புகழ் பெற்றவை. பொம்மக்கா, திம்மக்கா இரு பெண்களும் முத்துப்பட்டன் மீது காதல் கொள்கின்றனர். முடிவில் அவன் கொலை செய்யப்படுகிறான்.
சின்னதம்பி வில்லுப்பாட்டும் சிறந்த இசைக்கதைப் பாட்டாகும். செம்புலிங்கம், சந்தனத் தேவன், வீணாதிவீணன் போன்ற கொள்ளையர் பற்றியும் நாட்டுப் பாடல்கள் பல உள்ளன.
"முச்சந்தி ரோட்டு மேலே, மூன்று போலீஸ் பாரா நிற்க, வாரார் சொக்கத் தங்கம்- நம்ம, நாடார் ஜம்புலிங்கம்' இது போன்ற நாட்டுப்புறப் பாடல்கள் உழைப்பாளியின் உணர்வுப் பதிவுகள். ஏழை மக்களின் இன்ப துன்பங்களை இசையோடு கலந்து பாட்டாக வெளிப்படுத்தும் இந்த நாட்டார் கலை இலக்கியம் பற்றிய நூல், கிராமியத் தென்றல்.