தேசத் தந்தை காந்தியடிகளும், அண்ணல் அம்பேத்கரும் கொடுமைகளை, அவமானங்களை ஏற்று அர்ப்பணிப்பு உணர்வோடு மக்கள் உரிமைகளுக்காகப் போராடியதை பதிவு செய்யும் நுால். தென் ஆப்ரிக்காவில் காந்தியடிகள் சந்தித்த அநீதிகளும், லண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்ற போது, அம்பேத்கருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளும் சுட்டப்பட்டுள்ளன.
ஒரு இந்திய பிரதிநிதி கூட இடம் பெறாத சைமன் குழுவை இந்தியத் தலைவர்கள் எதிர்த்தனர். இன மக்களின் உரிமைகளை நிறைவேற்ற வேண்டி ஒரு அறிக்கையைத் தயாரித்து, சைமன் குழுவிடம் சமர்ப்பித்தார் அம்பேத்கர்.
நாடு விடுதலை அடைந்தால் தீண்டாமை ஒழியும் என்ற காந்தியின் எதிர்பார்ப்பும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு எந்த உரிமையும், பாதுகாப்பும் இல்லாத பட்சத்தில் அது பயனற்றது என்ற அம்பேத்கரின் வேதனையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தலைமுறை அறிந்துகொள்ள வேண்டிய வரலாற்றுப் பதிவாக விளங்கும் நுால்.
– புலவர் சு.மதியழகன்