சுயமாக வாழும் வாழ்வியல் தத்துவத்தை முன்னிறுத்தி, தகுந்த உதாரணங்களுடன் படைக்கப்பட்ட நுால். திருவாசகம், உபநிடதம், பகவத்கீதை துணை கொண்டு விளக்குகிறது. தண்ணீரின் பயனை பதிவு செய்கிறது. உடலைப் போற்றிப் பாதுகாக்கும் உத்தியைத் திருமந்திரத்தின் வாயிலாகப் புலப்படுத்துகிறது. மனதைப் பாதுகாத்தல் மூலமாக உடலைப் பாதுகாக்கும் உண்மையை உரைக்கிறது.
மனநலம் காத்தால் உடல் ஆரோக்கியம் தானாகவே காத்துக்கொள்ளும் என்ற பதிவு சால்புடையது. உடலுக்கு வேலை கொடுப்பதன் மூலமாக நோயற்ற வாழ்வை மேற்கொள்ள முடியும் என்கிறது. தண்ணீர் குடிப்பதால் குடல் சுத்தமாகும்; கழிவுகள் முற்றிலும் வெளியேறும்; பசியைத் துாண்டும் போன்ற பதிவுகளைக் கொண்டுள்ளது.
காற்றில் இருக்கும் சூட்சமம், பிராணயாமத்தின் சிறப்பு, ஆழ்மனதின் சக்தி, ஆற்றல், செயல்பாடு போன்ற வாழ்க்கையைச் சீரமைத்து மிகச் சிறப்பாக வாழ்வதற்கான பல ஆலோசனைகளைப் பதிவு செய்யும் நுால்.
–
முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்