பூக்கள் மலர்வது போல், மரம், செடி வளர்வது போல் வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலான கவிதைகளின் தொகுப்பு நுால். பூக்களை மட்டுமல்ல புத்தகங்களையும் நேசியுங்கள்; புத்தகங்களை மட்டுமல்ல பூக்களையும் வாசியுங்கள் என்ற முத்தாய்ப்புடன் மலர்ந்துள்ளது.
தொகுப்பில் பல கவிதைகள், ‘தினமலர்’ வாரமலர் வாசகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமாகியவை. அனுபவத்தை கூர்ந்து நோக்கி பெற்ற சிந்தனையின் துணைகொண்டு படைக்கப்பட்டுள்ளன. சூழ்நிலையை புரிந்து பார்வையின் தீவிரத்தை வெளிப்படுத்துகின்றன.
சொற்களை கோர்த்து வண்ணங்களை பூசியுள்ள ‘கற்கள்’ என்ற தலைப்பிலான கவிதை, பல்வேறு அனுபவங்களின் வழியாக பெற்றவற்றை சாரமாக வெளிப்படுத்துகிறது. மிதி வாங்கும் படிக்கல், கோபம் என்றாலும் அமைதி காக்கும் கல், மனித செயல்பாடால் கலவரப்படுத்தும் கல், பல்லை உடைக்கும் சோற்றுக்கல், தொல்லையான எல்லைக்கல் என பரிணாமங்களை மொழிகிறது. வார்த்தையால் மென்மையாக அணுகி பாடம் கற்பிக்கும் வகையில் உள்ளது.
தொகுப்புக்கு, ‘தினமலர்’ வாரமலர் இதழ் பொறுப்பாசிரியர் வழங்கியுள்ள வாழ்த்துரை, ‘கவிஞரின் பட்டறிவு, மொழியறிவு, சிந்தனை ஆற்றல், மன வளர்ச்சி மற்றும் சூழ்நிலைகளின் வெளிப்பாடு கவிதைகளில் நிறைந்து, யதார்த்தம் மற்றும் புனைவு கூறுகளால் செழுமை அடைந்துள்ளது’ என பொற்கிரீடம் சூட்டுகிறது.
கவிதைகளில், இளைஞர்கள் நம்பிக்கையுடன் தலைநிமிர வழிகாட்டும் வகையில் கருத்துகள் நிறைந்துள்ளன. தத்துவப் பார்வையை சிந்தனையுடன் இணைத்து அசைபோட வைக்கிறது.
பட்டறிவில் விளைந்த, ‘இன்னும் எவ்வளவு துாரம் என்றேன்... சக பயணி பேசாமல் இருந்தார்... பதில் சொன்னது மைல்கல்!’ போன்ற ஹைக்கூ கவிதைகளும் ஆங்காங்கே பிரகாசிக்கின்றன. ஆறாம் அறிவில் துவங்கி, அன்னைக்கு அஞ்சலி வரை, 25 தலைப்புகளில் நம்பிக்கை விதைக்கும் நுால்.
– மதி