கிறிஸ்தவ சமயம் பரப்ப, ஐரோப்பாவில் இருந்து, இந்திய பகுதிகளுக்கு வந்தவர்கள் பற்றிய குறிப்பு புத்தகங்கள் பல வெளிவந்துள்ளன. அவை, சமய நம்பிக்கை சார்ந்த கருத்தை முன்வைத்து, அவர்களின் வாழ்க்கை பற்றி பேசுகின்றன.
அனுபவங்களை, ஜெர்மனியைச் சேர்ந்த சமய போதகர் வில்லியம் தோபியாஸ் ரிங்கல்தெளபேயின் வாழ்க்கை சம்பவங்களின் தொகுப்பு இவற்றில் இருந்து கொஞ்சம் மாறுபட்டுள்ளது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், அதாவது இன்று கன்னியாகுமரி மாவட்டம் உள்ள பகுதியில், சீர்திருத்த கிறிஸ்தவ சமய திருச்சபையை நிறுவ வந்தவர் ரிங்கல் தெளபே. கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடியை மையமாகக் கொண்டு, சீர்திருத்த கிறிஸ்தவ சமயத்தை பரப்ப இவர் எடுத்த முயற்சிகள், அமைத்த ஆலயங்கள், அந்த பகுதி மக்களுடன் கொண்டிருந்த உறவு போன்றவை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
முதல்நிலை தகவல்களாக, கடிதங்கள், ஆங்கிலேய அரசு மற்றும் திருவிதாங்கூர் சமஸ்தான ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புத்தகத்தின் முதல் இரண்டு இயல்கள், தமிழகத்துக்குள் கிறிஸ்தவத்தின் வருகை பற்றி, வரலாற்று ரீதியாகவும் கிறிஸ்தவத்தை பரப்ப வந்த ஐரோப்பிய அமைப்புகள் பற்றியும் பேசுகின்றன.
சீர்திருத்த கிறிஸ்தவ சமயத்தை பரப்புவதற்கு ஜெர்மானி நாட்டைச் சேர்ந்த வில்லியம் தோபியாஸ் ரிங்கல் தெளபேயை பணி அமர்த்திக் கொண்ட, இரண்டு நிறுவனங்கள் உருவான விதம், அவற்றின் பின்புலம் என, தகவல்கள் துல்லியமாக தொகுக்கப்பட்டுள்ளது. தரங்கம்பாடியில் இருந்து அவர் தன் தங்கைக்கு எழுதிய கடிதத்தில், ‘தமிழர்கள், தம் இடது கை பெருவிரல் நகத்தை நீளமாக வளர்த்து, அதில் ஒரு துவாரம் போட்டு, எழுத்தாணியின் நுனியை அதில் இட்டு ஓலையில் எழுதுவர்’ என, குறிப்பிட்டுள்ளார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், முதல் ஆங்கிலப் பள்ளியை, மயிலாடியில் இவர் துவக்கியது, அந்த பகுதியின்
அப்போதைய சமூக அமைப்பு, பொருளாதார நிலை, சமயம் பரப்ப நாடு கடந்து வாழும் ஒருவர் அனுபவிக்கும் துயரம், சொந்தநாட்டின் பிரிவாற்றாமை, சமயத்தை பரப்புவதில் ஆங்கிலேய அரசின் உதவி, பணி சார்ந்த வெறுப்பு, அறியாமை, வறுமை, பஞ்சம், பட்டினி, கடன்சுமை என, பல விபரங்கள் அனுபவமாக நிறைந்து கிடக்கின்றன.
–மலரமுதன்