துப்பறியும் அல்லது பேய்க் கதையின் தலைப்புப் போல் ஆர்வத்தைத் துாண்டினாலும் எந்த மூன்று நிமிடம் என்னும் கேள்வி நமக்குள் எழுவது உண்மை. பேரண்டம் துவங்கியகாலத்தில் அதன் நிலையை உணர்த்தும் மூன்று நிமிடங்களை, அந்த மூன்று நிமிடங்கள் என்று தெரிவிக்கிறது இந்த நுால்.
பேரண்டம், ஓர் அணுவை விடவும் சிறிதாய்த் தோன்றி தற்போதைய நிலையை அடைந்து இருக்கிறது. இந்த நிலையை அடைந்த விதத்தை அறிவியலாளர்கள் அண்டப் பெருவெடிப்புக் கொள்கை வாயிலாக விளக்குகின்றனர். இந்தப் பெருவெடிப்பை ஓர் அழுத்த நிகழ்வு என்றும் குறிப்பிடுகின்றனர். என்றாலும் பெருவெடிப்பின் போது பேரொலி எழுந்தது என மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. எனவே, ‘பிங் பாங்’ என்பதைப் பெருவெடிப்பு என்பது பொருந்தும்.
போலந்து நாட்டின் கோப்பர் நிக்கஸ் சூரிய மையக் கோட்பாட்டை வெளியிட்டபோது, அந்தக் காலத்தில் ஏற்க தயங்கினாலும் இன்று அந்தக் கோட்பாட்டைச் சுற்றித்தான் இயற்பியல் ஆய்வுகள் நிகழ்கின்றன. பதினொரு பெரிய அத்தியாயங்களில் மூன்று நிமிட நிகழ்வைத் தெரிவிப்பதுடன், பேரண்டம் பற்றிய பேரதிசயங்களையும் தெளிவுபடுத்துகிறது. அறிவியலாளர்களும், அறிவியல் ஆர்வலர்களும் படிப்பதற்கேற்ற அறிவியல் நுால்.
– முகிலை ராசபாண்டியன்