திருமதி சூர்யகுமாரி. நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 372)
"பெற்றால் மட்டும் போதுமா?' எனும் முதுமொழியைத் தொடரும் சொற்றொடர் "குழந்தையைப் பேணி வளர்க்கத் தெரிய வேண்டாமா?' என்பது தான்! விரிந்து பரந்த இந்நூலில், தெளிவான விளக்கவுரைகள் இவ்விரு கேள்விகளுக்கு மட்டுமின்றி, தாய்மைப் பேறு அடையும் போது மட்டுமே ஒரு பெண்மணியின் இல்வாழ்க்கை பூரணத்துவம் அடைகிறது என்பதை வலியுறுத்துகிறது. அவள் கர்ப்பமாகி இருக்கும் தருவாயிலிருந்து, குழந்தையின் நலன் கருதி, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், செயல்பாடுகள், போஷாக்கு தரும் உணவு வகைகள், உட்கொள்ள வேண்டிய டானிக்குகள் மற்றும் சில எளிய உடற்பயிற்சிகள், கணவரின் கடமைகளான அன்புடன் கூடிய அரவணைப்பு அணுகுமுறைகள் எனப் பல்வேறு கோணங்களிலும் ஆய்கிறது. உபயோகமான தகவல்கள் யாவும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கு 15 வயது வரை இயற்கையாக ஏற்படும் நோய் நொடிகள், உடல் உபாதைகளுக்கான இயற்கை சித்தா மற்றும் ஓமியோபதி மருத்துவக் குறிப்புகள் யாவும் நிபுணர்களின் ஆலோசனைகளுடன், மனோதத்துவ ரீதியில் செயலாற்ற வேண்டிய நிலைகள் குறித்து, ஆக மொத்தம் 285 தலைப்புகளில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. பயனுள்ள நல்ல நண்பர்களின் சகவாசம், கெட்ட பழக்க வழக்கங்கள், மற்றும் போதைப் பொருட்களை அறவே தவிர்த்து ஒதுக்குதல் போன்ற நூலாசிரியரின் எச்சரிக்கை குறிப்புகள் வரவேற்கத்தக்கது மட்டுமின்றி, தற்கால சூழ்நிலைக்கு பொருத்தமானதும், அத்தியாவசியமும் ஆகும்!
கவர்ச்சிகரமான கனத்த முகப்பு அட்டை, தரமான தாள், நேர்த்தியான அச்சுக்கோர்ப்பு போன்ற அணிகலன்களுடன் வெளிநாட்டு நூல்களுக்கு இணையாக வெளிவந்துள்ள இந்நூலை, இளந்தாய்மார்களுக்கும், புதுமணத் தம்பதிகளுக்கும், நமது நல்வாழ்த்துக்களுடன் பரிசளித்து மகிழ்விக்கலாம்!