முகப்பு » கதைகள் » செகந்திராபாத் கதைகள்

செகந்திராபாத் கதைகள்

விலைரூ.200

ஆசிரியர் : அசோகமித்திரன்

வெளியீடு: கவிதா பப்ளிகேஷன்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
சாகித்திய அகாதெமி விருதாளர், அசோகமித்திரனின் தேர்ந்தெடுத்த இருபத்தியொன்பது கதைகளின் அரிய தொகுப்பாக உருவாக்கப்பட்ட நூல் இது.  பெரும்பாலான கதைகள், அவரது செகந்திராபாத் வாழ்க்கையின் பிரதிபலிப்புகளாகத் தெரிகின்றன.  
கடந்த காலத்தின் மறதியைத் துடைத்து எடுத்தபோது கிட்டிய, தேய்ந்த புகைப்படங்களை வைத்து நிறம் தீட்டிய ஓவியங்கள் போல் சில கதைகள் பழைமையோடு பளிச்சிடுகின்றன.
மனதில் நெடுங்காலமாக நின்று நிழலாடும்   இழப்புகள், ஏமாற்றங்கள், தோல்விகள், அவமானங்கள், நேசங்கள், வியப்புகள் ஆகியவற்றின் பிசிறுகள் பின்னாளில் கட்டுரைப்பொருளாகவோ, கவிதை, கதைக்கருவாகவோ வந்து விழுவதுண்டு.
அந்த வகையில், இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் வரும் காட்சிகள் உண்மையாகவே நூலாசிரியரின் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கக் கூடியவையோ என்று எண்ணுமளவு இயல்பாக இருக்கின்றன!
அப்படி ஏதும் ஈர்ப்புடையதாக இருக்கப்போவதில்லை என்று பயணிக்கும் கதைகளின் முடிவுகளில் ஒரு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தி முழுமையாக்கும் அசாத்தியத்திறமை அசோகமித்திரனுக்கு வாய்த்திருக்கிறது. இப்படித்தானே முடியப்போகிறது என்று எண்ணிக்கொண்டே வாசிக்கும்போது, அந்த நினைப்பை முற்றிலும் மாற்றிப்போடும் முத்தாய்ப்பான இறுதி வரிகள் கதையின் தரத்தை உயரத்தில் ஏற்றி, ஓ.ஹென்றியின் உத்தியை  நினைவூட்டுகின்றன.
ஒவ்வொரு மனித மனமும் ஒரு மாறுபட்ட கலவை. அந்தக் கலவையின் அடர்த்திகேற்பவே கதை நடை  அமைந்துவிடுகிறது. கதைக்களங்களிலும் அதுவே பிரதிபலிக்கும்.     
இந்தக் கதைகளில்  ஏமாற்றப்பட்டவனாகவோ, ஏங்குபவனாகவோ, புறக்கணிக்கப்பட்ட நேர்மையாளனாகவோ, நிராதரவாக நிற்பவனாகவோ, சாமானியனாகவோ, அப்பாவியாகவோ வரும் நாயகன், வாசகனின் உள்ளத்தில் பரிவை உருவாக்கி  நெருக்கமாகிவிடுகிறான்.
 முதுகுச் சதை பிய்யும்படி கசையடி வாங்கியும் இரக்கப்படும் சாயனா, கோல்கொண்டா கோலியை நினைத்துப் பார்க்கும் சுப்பாரெட்டியின் கிலி,  அவதிப்படும் அப்பாவின் சிநேகிதர் சையது, கோல்கொண்டா கோட்டைக்குள் வரும் பெட்டியில் மாதண்ணாவின் தலை, மீரா - தான்சேன் இடையிலான வரலாற்று உறவில் சந்தேகம் எனப்  பல்வேறு கதைகள் நூலில் கொடி கட்டிப்பறக்கின்றன!
கதைகள் இடையிடையே வெள்ளிக்கீற்றுகளாக மின்னும் நையாண்டியும், சுவையான வரலாற்றுத் தகவல்களும், தனித்துவமான முடிவுகளும் கதைகளுக்கு
வலுசேர்த்து படிக்கத் தூண்டுகின்றன. கதைவிரும்பிகள் தவிர்க்காமல் படிக்க வேண்டிய நூல்!
– பிரபாகரபாபு

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us