முகப்பு » வரலாறு » நான் அறிந்த தமிழ் அறிஞர்கள்

நான் அறிந்த தமிழ் அறிஞர்கள்

விலைரூ.200

ஆசிரியர் : செ.வை. சண்முகம்

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பகுதி: வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தமிழ் அறிஞர்கள் என்று குறிப்பிடத்தக்க பதினான்கு அறிஞர்களைக் குறித்த வரலாற்றுப் பதிவாக இந்நுால் திகழ்கிறது. இவர்கள் அனைவரும், 19, 20ம் நுாற்றாண்டுகளில் தமிழ்க் கல்வி வரலாற்றிலும், ஆய்வு வரலாற்றிலும் சிறப்புற்று விளங்கியவர்கள்.
இவர்களுள் கால்டுவெல், உ.வே.சா., ஆகிய இருவரையும் இந்நுால் ஆசிரியர் நேரில் காணவில்லை. எனினும், அவர்கள் இந்நுாற்றாண்டில் இன்றியமையா சாதனைகளை நிகழ்த்தியவர்கள் என்பதால், அவர்களையும் இணைத்தே இந்நுால் உருவாக்கப்பட்டுள்ளது.
கால்டுவெல் வரலாற்று ஒப்பிலக்கணம் மூலம் மொழிக் குடும்பம் என்ற புதிய கருத்தமைவை அறிமுகப்படுத்தி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு முதலியவை திராவிட மொழிக் குடும்பதைச் சார்ந்தவை என்று நிறுவி, வடமொழி இனத் தொடர்பை மறுத்தார் முதலான செய்திகள் உள்ளன.
உ.வே.சா., பதிப்புலகில் தனக்கென ஒரு தனித்தடம் பதித்தவர் என்பதையும் இந்நுால் விரிவாகப் பேசுகிறது. ஆயினும், இந்நுாலில் உ.வே.சா.,வின் குறுந்தொகைப் பதிப்பு மட்டும் விரிவாக ஆராயப்பட்டு உள்ளது.
இவர்கள் இருவரையும் அடுத்து, நுாலாசிரியருக்கு மொழியியல் ஆசிரியராக விளங்கிய தெ.பொ.மீ., குறித்து பன்முகப் பார்வையில் ஆராயப்பெற்று உள்ளது.
தெ.பொ.மீ., மொழியியல் கல்வியைத் தனித்துறையாக அமைத்த பெருமைக்குரியவர்.
இது மட்டுமன்றி, உலக அளவிலும் தமிழ் இலக்கிய வரலாற்றுக்கும், தமிழ்மொழி வரலாற்றுக்கும் அடிப்படை அமைத்து, சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கல்வியைத் துவங்கி வைத்த பெருமைக்குரியவர் என்பதையும் தெ.பொ.மீ.,யின் இலக்கண, இலக்கியக் கொள்கைகளையும் இந்நுால் நுட்பமாகப் பதிவு செய்துள்ளது.
ம.பொ.சி.,யைக் குறித்து, அவர் எழுதிய, ‘இலக்கியங்களின் இனவுணர்ச்சி’ என்னும் நூலைக் கொண்டு விரிவாக ஆராயப்பட்டிருக்கிறது.
தனிநாயக அடிகள் தமிழ்க் கல்வியை உலகளாவிய நிலைக்கு எடுத்துச் செல்ல பாடுபட்டவர் என்பதால், இவரைத் தமிழ்த் தொண்டர் தலைவர் துாதுவர் என்னும் நிலையில் கூறப்பட்டிருக்கிறது.
மு.வ., குறித்து கூறுகையில், அவர் தம் வாழ்வில் கண்டுணர்ந்து எழுதிய மொழிப்பற்று என்னும் நுாலைப் பற்றி இந்நுால் விரிவாகப் பேசுகிறது.
அகத்தியலிங்கம் மொழியியல் ஆசிரியர் என்பதைக் குறிப்பிட்டு, இவரது பன்முக ஆளுமையும் இந்த நுாலில் உண்டு.
இவர்களை அடுத்து பேராசிரியர் சோ.ந.கந்தசாமி, பொற்கோ, சிற்பி, சுந்தரமூர்த்தி, கார்த்திகேசு சிவத்தம்பி, சாரங்கபாணியார், மணிவாசக மெய்யப்பனார் ஆகியோரைக் குறித்தும் இந்நுால் பதிவு செய்துள்ளது.
அந்த வகையில் நாம் காண இயலாதபடி வாழ்ந்து முடித்தவரையும், நம்முடன் வாழ்ந்து கொண்டு இருப்பவரையும், அவர்களின் பணிகள் மூலம் தமிழுலகிற்கு அடையாளம் காட்டி, அவர்களுக்குச் சிறப்பு செய்யப்பட்டு இருக்கிறது.  தமிழ் ஆர்வலர்கள் இதை  நிச்சயம் வரவேற்பர் என்பதில் ஐயமில்லை.
முனைவர் இரா.பன்னிருகை வடிவேலன்

Share this:

Bookmark and Share Share  

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us