அறிவாலயம், தபால் பெட்டி எண்.667, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 240).
`நான், நீ, எனது' என்ற ஆணவத்தை விட்டு எல்லாம் அவனின் உடைமை என்ற ஞானத்துடன் பரமாத்மாவை யே வழியாகவும், பலனாகவும் எண்ணித் தொழுது ஏங்கி தனது வாழ்வை ஆன்ம நேய வேள்வியாக்கி இருப்பதுவே பிரும்மத் தியானமாகும். எனது சக்தியால், எனக்காக, நான் செய்கிறேன் என்று செருக்கு இல்லாமல் செய்து கொள்வதே உண்மையான தானம். இதன் விளைவாக நிஷ்டையில் சமாதி பெற்று சஞ்சலமற்று அசைவற்று இருப்பதே மகா மவுனம் என்பது. இப்படிப்பட்ட மகாத்மாக்களே பண்டரிநாதர், ஜெயதேவர், துளசிதாசர், நாமதேவர், கபீர்தாசர், ஞானேசுவரர் போன்ற ஞானிகள். இவர்களைப் போன்றோரது வாழ்வியல் சரிதை, அவதாரச் சிறப்பு, ஞான வேள்வி, போதனைகளைத் தொகுத்து கதை வடிவாக சுமார் 700 பெரியவர்களது வரலாற்றைக் கதை வடிவமாக பக்தசாரம் என்ற நூலாக கபாஜி சித்தர் என்பவர் இந்தி மொழியில் எழுதியுள்ளார். இவரை பிரும்மாவான நான்முகனின் அவதாரமாகக் கூறுவர். இதே கதைகள் பின்னாளில் குவாலியர் மொழியிலும், மராட்டிய மொழியிலும் வந்துள்ளது. இதிலிருந்து பண்டரிநாதர், ஜெயதேவர், துளசிதாசர், நாமதேவர், கபீர்தாசர், ஞானேசுவரர் என ஆறு ஞான புருஷர்களது வாழ்வியல் சரிதையை நிகழ்ச்சிகளோடு கதை வடிவாய்த் தந்துள்ளார் ஆசிரியர் ஸ்வாமி. ஆன்மிக சிந்தனை நூல்களை எளிமையாகவும், அனைத்துச் செய்திகளையும் விடுபடாது புராண இதிகாச வரலாற்றுச் சிதைவுகள் இல்லாது தருவதில் வல்லவர் ஸ்வாமி. ஒவ்வொரு கதைக்கும் கோட்டுருப் படங்களுடன் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக் கும் படைத்திருப்பது ஒரு சிறப்பு. ஜெயதேவர், நாமதேவர், ஞானேசுவரர் போன்றோரும் நம் மன அழுக்கினைப் போக்கவல்ல ஒரு காய கல்பம்.
"பிருமத்தை உணர்ந்தவர்களுக்கு ஜாதி பேதம் ஏது?" "சக்கிலியன் வீட்டில் வளர்ந்த அருந்ததியை வசிட்டர் மணந்தது எப்படி?"
"அந்தணர் என்பது பிறப்பை வைத்தா? இல்லை குணத்தை வைத்தா? கர்ம காரியங்களை வைத்தா? இல்லை பிரும்ம ஞானத்தை வைத்தா? என்பன போன்ற பல கேள்விகளுக்கு கதை வடிவில் பதில் உள்ளது இப்புத்தகத்தில். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை படித்துணர்ந்து வாழ்ந்திட துணை போகும் ஒரு ஞானக் கருவூலம்.