குகஷ்ரீ வாரியார் பதிப்பகம், 107, சிங்கண்ண தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-2. (பக்கம்:128).
பலர் வெளிநாடு சென்று வந்ததும், அந்நாட்டின் வளம், அமைப்பு, வசதிகள், மக்கள் வாழ்க்கை முதலியவற்றை விரிவாக எழுதி, அந்நாடு சென்று வந்த உணர்வை வாசகர்களும் அடையும்படியாக எழுதுவர். திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளும் தம் அனுபவத்தை எழுதுவதுடன் ஆன்மிகச் செய்திகளையும் இடையிடையே தெரிவித்து நூலுக்குப் பெருமை சேர்த்துள்ளார். `சிங்கப்பூரில், சாலை சந்திப்புகளில், பச்சை விளக்கு தெரிந்தவுடன் மாமியார் வீட்டுக்குப் போகத் துடிக்கும் தலை தீபாவளி மாப்பிள்ளையைப் போல் கார்கள் கடும் வேகத்தில் ஓடத் துவங்கும்' என்று நகைச்சுவையுடன் எழுதியிருப்பதும் (பக்.13),கோலாலம்பூரில் இராமாயண விரிவுரையின் போது `நஞ்சமன்னவரை நலிந்தால்' என்று தொடங்கும் கம்பர் பாடலுக்கு, வாரியார் அருளிய அருமையான பலபொருள் உரையை நயமுடன் கூறியிருப்பதும் (பக்.59-62),நூல் படிப்போருக்கு இன்பம் கொடுக்கும். மலாய் மொழியில் கலந்துள்ள தமிழ்ச் சொற்களின் பட்டியலையும் வாரியார் சுவாமிகள் கூறியிருப்பது அவரின் தமிழ் பற்றுக்கு எடுத்துக்காட்டாகும். காஷ்மீர் அமர்நாத் காட்சிகளை வாரியார் சுவாமிகள் விவரிக்கும் பாங்கு, நாமும் அவருடன் பயணிப்பது போன்ற உணர்வை தருகிறது. அருமையான நூல்.