வெளியீடு: உயிர்மை பதி்ப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை -18
கதை என்பது ஒரு ரகசியமான புதிர் விளையாட்டு . நாம் அந்த விளையாட்டில் பாதியில் கலந்து கொள்கிறோம். பாதியில் விலகியும் விடுகிறோம். அதற்குள் என்ன நடக்கிறது.ஏதோவொரு சம்பவமோ, நிகழ்வோ,கதாபாத்திரத்தினையோ பின்தொடர்ந்து செல்கிறோம். நினைவுகள், சமிக்ஞைகள்,உணர்வெழுச்சிகள், அறிந்த,அறியாதநிலக்காட்சிகள் தோன்றிமறைகின்றன. சொற்களின் வழியே உருவான ஒரு உலகை நாம் நிஜ உலகோடு அடையாளப்படுத்துகிறோம். பொருத்திப்பார்க்கிறோம் புரிந்து கொள்கிறோம். அல்லது தவற விடுகிறோம். கதைகள் தான் சொல்ல வந்த விஷயத்தை மட்டுமே புரிய வைப்பதில்லை. அவை புலன்களோடு விளையாடுகின்றன. புலன்களைக் கிளர்ந்து எழச் செய்கின்றன. அல்லது ஒடுக்குகின்றன. வாழ்வனுபவம் உருவாக்காத நினைவுகளை நமக்குள் உருவாக்குகின்றன. எல்லோரது கதைகளின் அடியிலும் சுயசரிதையின் மெல்லிய நீரோட்டம் ஓடிக் கொண்டிருக்கிறது. அது எழுத்தாளன் மட்டுமே அறிந்த நதி. இது எஸ்.ராமகிருஷ்ணனின் எட்டாவது சிறுகதைத் தொகுதி.