வெளியீடு: குமரன் பதிப்பகம், 3, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டிபஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 256. விலை: ரூ.120).
சின்னஞ்சிறு வயதில் காந்திஜியிடம் ஆரஞ்சுப் பழம் வாங்கிய சிறுவன், கல்லூரிப் பருவத்தில் காந்திஜியிடம் கையொப்பம் வாங்கிய இளைஞன், பிற்காலத்தில் நீதிபதியானபோது ஒரு வழக்கின் தீர்ப்புக்காக காந்தியின் கருத்தை எடுத்தாண்டவர் அவர் தான், அரசு வழக்கறிஞராக, நீதிபதியாக, தலைமை நீதிபதியாக, சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக, கர்நாடக மாநிலத்தின் தற்காலிக கவர்னராக, சிறந்த கவிஞராக, இலக்கியவாதியாக விளங்கிக் கொண்டிருக்கும் நீதியரசர் மோகன்.
"இவன் அப்பனைக் கொன்று அவதரித் தவன்' (பக்.25) என்று ஊரும் உறவும் கரித்துக் கொட்டினாலும் இன்று தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைத்த அரிய மாமனிதராய் விளங்கிக் கொண்டிருக்கும் நீதியரசரின் 74 ஆண்டு கால வரலாற்றை அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளுடன் எழுச்சிமிக்க நடையில் வடித்துத் தந்துள்ளார் ஜீவபாரதி.
ஐகோர்ட் வளாகத்தில் மனுநீதிச் சோழனுக்கு சிலை இவரது முயற்சியாலேயே நிறுவப்பட்டது. பத்துக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களும், ஏழு ஆங்கில கவிதை நூல்களையும் படைத்துள்ள உலகக் கவிஞர் பேரவையின் நிறுவனர்களின் ஒருவரான மோகனின் இவ்வரலாற்று நூல் வளரும் சமுதாயத்திற்குப் பயன்படக்கூடிய நூல். வாழுங்காலத்தில் வாழும் மாமனிதர்களின் வரலாற்றை எழுதும் இத்தகைய நூல்கள் வரவேற்கப்பட வேண்டியவை. பயனுள்ள நல்ல வாழ்க்கை வரலாற்று நூல் இது.