கிழக்கு பதிப்பகம் விலை: ரூ.60
'ஆப்கனிஸ்தானின் சரித்திரம் மிகப் பெரியது. மிகவும் துக்ககரமானதும் கூட. முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக யுத்தங்களால் நாசமான தேசம் அது.
மன்னர்களின் காலம் முடிவடையும் தருவாயில் ஆப்கனிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்தது. அமெரிக்க & சோவியத் பனிப்போரில் ஆப்கன் ஒரு பகடைக்காயாக உருட்டி விளையாடப்பட்டது. பல்லாயிரக்கணக்கில் உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம். ஆப்கனின் பொருளாதாரமே அடியோடு நாசமான காலம் அது.
இந்தப் பனிப்போர் காலத்தில்தான் ஆப்கனில் நிறைய போராளி அமைப்புகள் உருவாக ஆரம்பித்தன. ஏற்கெனவே இருந்த இனக்குழுச் சண்டைகளுக்கு நடுவே போராளிக் குழுக்களின் போர் முரசுகள் சேர்ந்துகொள்ள, ஆப்கனிலிருந்து சோவியத் படைகளை அவர்களால் பின்வாங்கிச் செல்லவைக்க முடிந்ததே தவிர, தேசத்தின் அமைதியை மீட்டெடுக்க முடியவில்லை.
தாலிபன்களின் காலத்தில் ஆப்கன், அடிப்படைவாத அரசின் கோரப்பிடியில் சிக்கியது. மதத்தின் பெயரால் வெளியிடப்பட்ட உத்தரவுகளால், மக்களின் அடிப்படைச் சுதந்தரம் காணாமல் போனது. மிகச்சிறிய தவறுகளுக்குக்கூட கண்மூடித்தனமான தண்டனைகள் வழங்கப்பட்டன. தாடியில்லாமல் ஆண்களும் பர்தா அணியாமல் பெண்களும் வெளியே நடமாடக்கூட முடியாது என்கிற நிலைமை.
இதே காலகட்டத்தில்தான் ஒசாமா பின்லேடனின் அல் கொய்தா இயக்கம் சூடானிலிருந்து இடம் பெயர்ந்து ஆப்கனுக்குக் குடிவருகிறது. மக்களிடமிருந்து சுரண்டிய பணத்தை ஆப்கன் அரசு தீவிரவாத இயக்கங்களுக்குத் தாரைவார்த்தது. பணம் போதாதபோது போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல் மூலம் பணத்தேவை பூர்த்தி செய்யப்பட்டது.
அல்கொய்தாவின் அமெரிக்கத் தாக்குதலின் விளைவாக அமெரிக்கா, ஆப்கன் மீது படையெடுத்து தாலிபன்களை அடியோடு ஒழித்தது, பிறகு ஹமீத் கர்சாய் அங்கே ஆட்சிக்கு வந்தது, இன்றுவரை ஒசாமா பின்லேடனை அங்கே தேடிக்கொண்டிருப்பது, சமீபத்திய பொதுத்தேர்தல் வரையிலான ஆப்கனின் மிக நீண்ட வரலாறு, இந்நூலில் மிகத் திறமையாக விவரிக்கப்பட்டிருக்கிறது'