அமுதம் பதிப்பகம், மதுரை-625 020.
சின்னத் திரையில் பட்டிமன்றத்தில் கொடி கட்டிப் பறந்து, வண்ணத் திரையில் கால்பதித்து, உயர்ந்து, உலக நாடுகள் எல்லாம் சிறகடித்துப் பறந்து தன் நகைச்சுவைத் தமிழில் நம்மை அடிமையாக்கிவிடும் தமிழ்ப் பேராசிரியர் கு.ஞானசம்பந்தனின் சிரிப்பலை வீசும் நூல் இது!ஞானசம்பந்தன் பேச்சில் அதிரடி சிரிப்பு இருக்கும்! அதே சிரிப்பு வெடிகளைத் தன் எழுத்திலும் ரிமோட் கன்ட்ரோல் மூலம் புதைத்து வைத்து, படிக்கும்போது வெடிக்கச் செய்யும் திறமை இவருக்கு மட்டுமே உண்டு!"விருமாண்டி'யில் கமலஹாசன் இவரை நடிக்க வைத்தார். "இதயத் திருடன்' படத்தில் இயக்குனர் சரண் இவர் நடிப்பை உயர வைத்தார்! நகைச்சுவை "கை வந்த கலை'யாக உள்ள ஞானசம்பந்தனை இயக்குனர் பாண்டியராஜன் தன் படத்தில் நடிக்க வைத்து நகைச்சுவைக் கலைக்கு மகுடம் சூட்டியுள்ளார். இதை இந்த நூலில் அழகாக எழுதியுள்ளார்."சினிமாவுக்கு போகலாம் வாங்க' என்னும் முதல் தலைப்பு முதல் "விருமாண்டி தந்த தைரியம்' "என்றும் அன்போடு' வரை 40 தலைப்புகளில் வெளிவந்துள்ளது.டூரிங் தியேட்டரில் தரை மணலில் அமர்ந்து சினிமா பார்த்தவரே, மீண்டும் ஒரு நாள் திரையில் தோன்றி நடித்து சினிமாக்காரர் ஆனதை இந்த நூல் சிரிக்க சிரிக்க பேசுகிறது.ஞானப்பால் உண்டதால் திருஞானசம்பந்தர் தேவாரம் பாடி தமிழை வளர்த்தார். சினிமாப் பால் குடித்ததால் கு.ஞானசம்பந்தன் சிரிக்க சிரிக்கப் பேசி உலகமெல்லாம் பரந்து சிலேடைத் தமிழை வளர்க்கிறார் என்பதை இந்த நூலின்பால் அறியலாம்.