ராஜ ராஜன் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 560. விலை: ரூ.195).
"ஏன் இந்த நூல்?' என்ற தலைப்பில், வாழ்வது என்பதற்கும், பிழைப்பது என்பதற்கும் உள்ள வேறுபாட்டை ஆர்.எம்.வீ., விளக்கும் இடம் மிக அருமையாக உள்ளது (பக்.6, 7). நாம் தற்போது வாழ்கிறோமா? அல்லது பிழைக்கிறோமா? என்ற ஐயத்தைக் கிளப்புகிறது. ஆர்.எம்.வீ., "பிழைப்பு என்பது தனக்கு, வாழ்க்கை என்பது பிறருக்கு' என்று கூறுவதை யாராலும் மறுக்க இயலாது (பக்.11).
நண்பர்களுடன் சேர்ந்து சீட்டாடியது, மாமா கடையில் இருக்கும் பணத்தில் கை வைத்தது, தன் அண்ணனை அடித்தது என்று தம் இளமையில் ஆர்.எம்.வீ., செய்த தவறுகளையும் இந்நூலாசிரியர் குறிப்பிடுவதைப் படிக்கும் பொழுது, இந்நூல் உண்மை கூறும் நூலாக இருக்கிறது என நாம் உணர்கிறோம் (பக்.24).
"நாடோடி மன்னன்' படத்தின் வெற்றிக்கு ஆர்.எம்.வீ., உழைத்ததும் (பக்.97-119), "தெய்வத் தாய்' படத்தில் எம்.ஜி.ஆரின் தாயாக நடித்த எஸ்.வரலட்சுமியை மூவாயிரம் அடிகள் படம் எடுத்த பின்னர் மாற்றி, பண்டரிபாயை நடிக்க வைத்த அசாத்திய துணிச்சல் (பக்.155-157),
"காவல்காரன்' படத்தில் சந்தித்த இடர்கள் (பக்.180-193), பரங்கிமலை தொகுதி தேர்தலில், சுவரொட்டியில் செய்த பரபரப்பு (பக்.202-205) ஆகிய நிகழ்ச்சிகள் ஆர்.எம்.வீ.,யின் மன உறுதியையும், எம்.ஜி.ஆரின் முன்னேற்றமே தம் கடமை எனக் கொண்ட மனத்தெளிவும் சுட்டிக் காட்டப்படுகின்றன.
ஆர்.எம்.வீ.,க்கு இரண்டாவது மகள் பிறந்தபோது, தாமதமாகச் சென்று குழந்தையைப் பார்த்தபோது, நர்ஸ் கேட்ட கேள்வியையும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டிருப்பதைப் படிக்கும்போது, அவரின் தூய உள்ளத்தையும், தவறை ஏற்கும் பண்பும் கண்டு வியக்கிறோம் (பக்.501). நூலாசிரியர் ராணிமைந்தனின் இயல்பான தமிழ் நடை மிக அருமை.