ஓம் சக்தி: ஆசிரியர்: நா.மகாலிங்கம் (விலை ரூ.40-00)
ஓம் சக்தி துளசி போன்றது. பூக்களால் செய்யப்படுவது பூசை. துளசியோ பிரசாதமாக ஆலயத்தில் பெருமை பெற்றது என்ற பொறுப்பாசிரியர் வர்ணனையுடன் மலர் துவங்குகிறது. வன்முறையைத் தீர்க்க காந்தியம் வழி என்ற அருட்செல்வர் நா.மகாலிங்கம் கட்டுரையின் ஆழ்ந்த சிந்தனை, இந்துத்துவா சித்தாந்தம் எப்படி இந்தியாவின் அரசியலுக்கு உதவாதோ அதே போல, தமிழ்நாட்டு அரசியலில் இருந்து திராவிட சித்தாந்தம் ஒதுங்க வேண்டும் என்ற கருத்தைக் கூறும் ஜெயகாந்தன் பேட்டி ஆகியவை முதலில் கருத்தைக் கவர்பவை.
கட்டுரைகள் எல்லாமே உயரிய லட்சியத்தை தெளிவாக்குபவை. சுவாமி ரங்கநாதானந்தா விளக்கும்"இரண்டு இந்தியா' நெல்லை. சு.முத்துவின் விஞ்ஞானக் கட்டுரை, குகனின் பெருமை பற்றிப் பேசும் சிவானந்த விஜயலட்சுமி விளக்கங்கள் ஆகியவை துளசி இலைகளின் தொகுப்பு.
அசோகமித்திரன், பொன்னீலன், விமலாரமணி உட்பட 12 கதையாசிரியர்களின் சிறந்த படைப்புகள், அப்துல் ரகுமான், மு.மேத்தா, தமிழன்பன் உட்பட பலரது கவிதைப்படைப்புகள், ஆன்மிக நெறியாளர்களின் அழகிய வண்ணப்படங்கள் என்று மலர் நறுமணம் கமழ்கிறது.