விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
வோட்டுப் போடுவது மட்டும்தான் இன்று நமக்குத் தெரிந்த அதிகபட்ச அரசியல் பங்களிப்பு. அரசியல் மைதானத்தில் தலைவர்களும், அவர்களின் அடிவருடிகளும் மட்டுமே விளையாடத்தக்கவர்கள் என்று எண்ணுவதால் பலரும் அரசியல் மீது அதிகம் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார்கள்.
கட்சிகள் உருவான கதைஎன்ற இந்த நூலை, இந்திய அரசியல் கட்சிகளைப் பற்றிய அருமையான தொகுப்பாகத் தந்திருக்கிறார் அருணகிரி. இவர் எழுதியிருக்கும் ஆக்கபூர்வ _ தேடுதல் மிகுந்த _ படிக்கிற போதே மனதில் நம்பிக்கையைத் துளிர்க்க வைக்கிற, அரசியல் உலகின் போராட்டகர விஷயங்கள், அரசியலை விட்டு விலகி நிற்க நினைக்கிறவர்களைக்கூட உள்ளே இழுக்கும்.
மாணவ சமுதாய எழுச்சி மூலம் உருவெடுத்த அஸ்ஸாம் கணபரிஷத்ஒ, பழங்குடியினரது மேம்பாட்டுக்காக கிளர்ந்தெழுந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ஆக்ரோஷத்தால் அவதரித்த மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் என ஒவ்வொரு கட்சியும் உருவான கதையை விவரமாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர்.
மத்தியில் எத்தகைய ஆட்சி அமையும் என்பதை தீர்மானிக்கக் கூடிய சக்திகளாக இருக்கும் தேசியக் கட்சிகள் பற்றியும், நாட்டை ஆளத்தக்க காங்கிரஸ், பாரதிய ஜனதா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பற்றியும் புள்ளி விவரங்களோடு நூலாசிரியர் தரும் தகவல்கள் சுவையானவை. அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதியில் 267 வாக்குகள் மட்டுமே பதிவாகி, அதில் 266 வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் எம்.எல்.ஏ_வான கதையை எல்லாம் படிக்கையில் சுவாரஸ்யமும், வியப்பும் நம்மை விழிவிரிக்க வைக்கின்றன.
இன்றைக்கு ஆளுங்கட்சியாகவோ எதிர்க்கட்சியாகவோ இருக்கிற ஒவ்வொரு கட்சிகளும், எவ்வளவு போராட்டங்களையும் நெருக்கடிகளையும் கடந்து, இத்தகைய தகுதியை அடைந்திருக்கின்றன என்ற விவரங்கள் எல்லாம் இந்த நூலில் நுணுக்கமாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இந்திய அரசியலில் எந்நாளும் பேசப்படத்தக்க தலைவர்களைப் பற்றிய ஸ்கேனிங் பார்வையாகவும் பல தகவல்கள் இதில் கொட்டிக் கிடக்கின்றன.
மொத்தத்தில் இந்த நூல் இந்திய அரசியல் கட்சிகளைப் பற்றிய அரிய அரிச்சுவடி!