விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
‘மாதங்களில் நான் மார்கழி’ என்றான் பகவத்கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதம் என்றாலே உடனே நம் நினைவுக்கு வருவது, திருப்பாவை. முப்பது பாடல்கள். நாள் ஒன்றுக்கு ஒரு பாடல் வீதம் முப்பது நாட்களும் அதிகாலையில் திருப்பாவை பாசுரங்களை சொல்லிக்கொண்டு பக்தர்கள் குழுவாகச் செல்வதைப் பார்க்கிறோம். நிறைய வீடுகளில் ஒலிநாடாக்களில் திருப்பாவை ஒலிப்பதையும் கேட்கிறோம்.
தமிழ் மறை எனப் போற்றப்படும் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் ஒரு பகுதியாக உள்ள திருப்பாவை பாடல்கள் பக்தியின் உச்சத்தை எடுத்துக் காட்டுபவை. தமிழ் மொழியின் கவுரவச் சின்னமாகத் திகழும் பாக்கள் அவை. இன்றளவும் வெளி மாநிலத் தலங்களிலும், வெளி நாடுகளில் உள்ள ஆலயங்களிலும் தமிழ் ஒலிக்கிறது என்றால், அதற்கு திருப்பாவை பாசுரங்களின் தெய்வீகமும் மொழி அழகுமே காரணம்.
ஆண்டாள் _ ஆன்மிக ஒளி பரப்பியவள்; தமிழக பெண் கவிஞர்களில் தலையாயவள். உலகெங்கும் பக்தியின் வீர்யத்தை, தமிழின் அழகைப் பறை சாற்றியவள் என்பதால்தான், ஆண்டாள் அவதரித்த திருவில்லிபுத்தூர் ஆலய கோபுரம், தமிழகத்தின் அரசுச் சின்னமாகத் திகழ்கிறது.
ஆன்மிக அன்பர்கள் அனைவரும் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய பாடல்கள் என்று திருப்பாவை குறித்து முன்னோர்கள் கூறியுள்ளனர். ‘பாதகங்கள் தீர்க்கும், பரமனடி காட்டும், வேதமனைத்துக்கும் வித்தாகும் கோதையின் தமிழான இந்த ஐயைந்தும் ஐந்துமான முப்பது பாடல்களை அறியாதவர்களை இந்த வையம் சுமப்பதும் வம்பு’ என்கிறது திருப்பாவைக்கான சிறப்புப் பா.
திருப்பாவை பாடல்கள் அடங்கிய இந்த நூலில், பதவுரை, விளக்கவுரையோடு, எந்தச் சூழ்நிலையில் இந்தப் பாடல்வரிகள் பாடப்பட்டன, இவற்றின் ஆன்மிகப் பொருள் என்ன என்ற முழுமையான விளக்கங்களும் அமைந்திருப்பது சிறப்பு. சில வார்த்தைகளின் பொருளை விளக்க, தகுந்த விளக்கக் கதைகளையும் கொடுத்து, நூலை முழுமை பெறச் செய்திருக்கிறார் நூலாசிரியர் ஸ்வாமி.
மார்கழி மாதம் மட்டும் அல்லாமல், எந்நேரமும் இறைச் சிந்தனை மேலோங்க, இந்த நூல் ஆன்மிக அன்பர்களுக்கு பேருதவி புரியும்.