விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
எத்தனையோ மகான்கள் பிரபஞ்சம் முழுவதும் இருக்கிறார்கள். ஆனாலும், மகான்களும் சித்தர்களும் நிறைந்த பூமியாக இருந்துள்ளது தமிழகம்தான். வாடி இருப்போர்க்கும், வாழ்க்கையை நடத்த வழியின்றித் தவிப்போர்க்கும், வளத்தையும் நலத்தையும் வாரி வழங்குபவர்கள் சித்த புருஷர்கள். தங்கள் அருட்செயல்கள் மூலம் எண்ணிலடங்கா அற்புதங்களைச் செய்திருக்கும் சித்த புருஷர்களைப் பற்றி ‘சக்தி விகடன்’ இதழில் வெளியாகிவரும் கட்டுரைகளின் தொகுப்பே ‘திருவடி தரிசனம்’.
சாதாரண மனிதராகப் பிறந்து, இறைவனின் கருணையால் மகிமைகள் கைவரப்பெற்ற சித்த புருஷர்களின் உபதேசங்களையும் அவர்களின் சித்து விளையாட்டுகளைப் பற்றியும் மிக மிக சுவாரஸ்யமான நடையில் விவரித்திருக்கிறார் நூலாசிரியர் பி.சுவாமிநாதன்.
இந்தத் தொகுப்பில், மகான் ஆதிசங்கரர் தொடங்கி, போதேந்திர தீர்த்தர், சதாசிவ பிரமேந்திரர், திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் ஆகியோரையும், தியாகராஜ ஸ்வாமிகள், முத்துஸ்வாமி தீட்சிதர் போன்ற சங்கீத மூர்த்திகளையும், ஸ்ரீ ஸ்வயம்பிரகாசர், பழனி தங்கவேல் ஸ்வாமிகள், சங்கு ஸ்வாமிகள், சூட்டுக்கோல் மாயாண்டி ஸ்வாமிகள் போன்ற அண்மைக்கால சித்த புருஷர்களையும் அவர்களின் மகிமைகளையும் பற்றி அழகுற எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
சித்தர்களின் திருவடியை தரிசிப்பதன் மூலம், நமது பாவங்கள் விலகி, புதுப்பிறவி எடுத்த உணர்வை நிச்சயம் பெறுவோம்.
வாருங்கள், தரிசிக்கத் துவங்கலாம் ...