விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
வேதம் என்பது _ கர்ம காண்டம் என்பார்கள். வேதங்களைப் பயின்றவர்கள், கர்ம மார்க்கத்தில், அதாவது செயலில் ஊக்கமுள்ளவர்களாகத் திகழ்வார்கள். வேதாந்தம் என்பது, ஞானத்தின் கருவூலம். அது முழுக்க முழுக்க அறிவு சார்ந்த ஒன்று. ஞானம் பெற விரும்புபவர்கள், வேதாந்தக் கல்வி கற்பதன் மூலம் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
தம் உடலையும் வாழ்க்கையையும் ஞானம் பெறுவதற்காகவே வருத்தி உழைத்த ஞானியர், தாம் உணர்ந்த அறிவை வேதாந்தங்களாக உபதேசித்தனர். அந்த வகையில் வேதாந்தம், அன்றைய கால அறிவியல் என்று சொல்லலாம். இன்றும் கூட, நவீன அறிவியலின் சில கூறுகளோடு வேதாந்தக் கல்வி இணைந்து போகிறது.
உலகத்து உயிர்களின் தோற்றம், மறைவு, மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும், மனிதன் சுக துக்கங்களை ஏன் பெறுகிறான், வாழ்க்கை கசப்பதற்கும் இனிப்பதற்கும் எது காரணம் போன்ற ஆன்மத் தேடலும் அறிவுத் தேடலும் கதைகளின் வாயிலாக வேதாந்தங்களில் விளக்கப்பட்டுள்ளன. ஸ்வாமி எழுதியிருக்கும் இந்த நூலில், வேதாந்த, உபநிடதக் கதைகளும், அவற்றில் பொதிந்துள்ள உள்ளர்த்தங்களும் விளக்கங்களும் தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும் என்ற நசிகேதன் _ எமதர்மனின் உரையாடல்கள், கட உபநிடதக் கதை வாயிலாக வெளிப்படுகிறது. மைத்ரேயி _ யாஞ்ஜவல்கியர் உரையாடல்கள், சத்யமேவ ஜயதே _ வாய்மையே வெல்லும் என்பதை சத்யகாமன் கதை வாயிலாக மெய்ப்பிக்கும் முண்டகோபநிடதக் கதை, தேவர்கள் _ அசுரர்கள் பிறப்பும் அவர்கள் கதையின் மூலமாக விளக்கப்படும் தத்துவங்களும் என இந்த நூலில் பண்டைய பாரத ஞானக் கருத்துகளை தெளிவாக விளக்கியுள்ளார் நூலாசிரியர். அந்த வகையில் இந்த நூல், ஆன்மிக நாட்டமும் ஆன்மத் தேடலும் கொண்டவர்களுக்கு அருமருந்து.