விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
ஆலயங்கள் நாகரிகத்தின் துவக்கம். மன்னர்களும் மக்களும் ஆலயங்களில்தான் கூடினார்கள்; ஒன்றிணைந்தார்கள். அமைதிக்கு வித்திட்டார்கள். சிற்பக்கலையை நிலைபெறச் செய்தார்கள். ஆடற்கலையை அரங்கேற்றினார்கள். மன்னர்களின் புகழை கல்வெட்டுகளில் பதித்தார்கள். பண் இசைத்தார்கள். ஆன்மிகத்தை வளர்த்துப் போற்றினார்கள்.
நமது கலாசார _ பண்பாட்டின் அடையாளங்களாக ஆலயங்கள் திகழ்கின்றன. ஆலயங்கள்தான் மனிதனை கோபங்களிலிருந்தும் குற்றங்களிலிருந்தும் கொடூரங்களிலிருந்தும் வெகுவாகக் குறைக்கின்றன.
அந்த ஆலயங்களில் சில, காலத்தின் மாற்றத்தாலும், வசதி வித்தியாசத்தாலும் பக்தர்களின் வருகை குறைந்தும், வருமானம் குறைந்தும், பராமரிப்பில்லாது, புல் பூண்டு, மரங்கள் வளர்ந்து பாழடைந்து கிடக்கின்றன.
அப்படிப்பட்ட ஆலயங்களைத் தேடித் தேடிக் கண்டறிந்து அதன் பெருமைகளையும், புராண சிறப்புகளையும், அவற்றில் அமைந்துள்ள தெய்வங்களின் மகிமை, வழிபடும் முறைகள் முதலியவற்றையும் சக்தி விகடன் இதழ்களில் தொடர்ந்து எழுதி வருகிறார் பி.சுவாமிநாதன்.
கை வைத்தால் கைலாசம் என்பதை உணர்ந்த பொதுமக்கள், தாங்களாகவே முன்வந்து, அந்த ஆலயங்களை சுத்தப்படுத்தி புதுப்பிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். இப்படி பல ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்திருப்பதைப் பார்க்கும்போது மனம் பூரிக்கிறது.
இந்நூலில் 21 கோயில்கள் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த ஆலயங்களின் கர்ப்ப கிரகத்துக்கே சென்று வழிபடும் உணர்வு இந்நூலைப் படிக்கும்போது ஏற்படும்.