விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
கவிதை என்பது கலைகளின் அரசு என்று மறைந்த எழுத்தாளர் புதுமைப்பித்தன் கூறியிருக்கிறார்.
கவிதை என்பது ஒரு தவம். அதுவொரு மோனநிலை. கவிதையை இரண்டு வகையாக எழுத முடியும். ஒன்று அனுபவத்தின் வாயிலாகத் துய்த்துணர்ந்து எழுதுவது. மற்றொன்று கற்பனையைக் கொண்டு அனுபவத்தைச் செப்பனிடுவது. இந்த இரண்டு முறைகளுமே தமிழ்க் கவிதையுலகில் கையாளப்பட்டு வருகிற நடைமுறைகள்தான்.
ஒரு சிலருக்கு இந்த இரண்டு நடைகளுமே வாய்த்துவிடுவது உண்டு. அது பயிற்சியிலிருந்து வருவது. பிரான்சிஸ் கிருபா இரண்டாவது வகைக் கவிஞர். கற்பனையைக் கொண்டு அனுபவத்தைச் செப்பனிடுவது இவருக்குக் கை வந்திக்கிறது.
ஆனந்த விகடனில் இவரது கவிதைகள் மல்லிகைக் கிழமைகள் என்ற தலைப்பில் தொடர்ந்து வெளிவந்தபோது, கவிதை எழுதாத பலரும் தங்களுக்குள்ளும் கவிதை மனசு இருப்பதை உணர்ந்திருக்கிறார்கள். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை சொன்னது போல உள்ளத்து உள்ளது கவிதை... உண்மை தெளிந்துரைப்பது கவிதை என்பது இந்த இடத்தில் மிகச் சரியாகப் பொருந்தி வருகிறது.
கவிஞர் ஒரு கவிதையில் எழுதுவார்...
மரங்களுக்கு மேலே பறவைகள் இருந்தன
பறவைகளுக்கு மேலே மேகங்கள் இருந்தன
மேகங்களுக்கு மேலே வானம் இருந்தது
வானத்துக்கு மேலே துடித்துக்கொண்டு இருந்தன
இரண்டு இதயங்கள் ஒரு தாளத்தில்!
காதல் எவ்வளவு உணர்வுமிக்கது என்பதை இந்த வரிகள் அழகாக உணர்த்திவிடுகின்றன.
இன்றைய நவீன உலகத்தில் எத்தனையோ விஞ்ஞான வளர்ச்சி இருந்தாலும் காதலைச் சொல்லும்போதும் வெளிப்படுத்தும்போதும் அதற்கு சிறந்த வடிவமாக இன்றளவும் திகழ்ந்து வருவது கவிதைதான்; கவிதை ஒன்று மட்டும்தான். காதலின்றி இந்த உலகம் எப்படி இருக்க முடியும்?
காதலை காதலிப்பவர்களும், கவிதையை காதலிப்பவர்களும் இந்த நூலைக் காதலிப்பார்கள்.