விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
பகவத் கீதையை ஒரு முறை படித்தாலோ, ஒரு முறை விளக்க உரை சொல்லக் கேட்டாலோ புரிந்து கொண்டு விட முடியாது. தினமும் பாராயணம் செய்யப்பட வேண்டிய பக்திப் பொக்கிஷம் அது. அதையும் ஒரே மூச்சில் படித்துவிடாமல், தினமும் துளித்துளியாகப் பருக வேண்டிய அமிர்தம் அது. கீதையை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதுத் தெளிவும் வைராக்கியமும் ஏற்படுவதை உணரமுடியும். அதேபோல், கீதை குறித்த தொடர் சொற்பொழிவுகளை பல தடவை கேட்கும்போதுதான், அதன் உட்பொருள் விளங்கும். வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கும்.
போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு ஏற்படும் சந்தேகங்கள், நம் ஒவ்வொருவருக்கும் ஏற்படக்கூடியவை. அவனுக்கு தேரோட்டியான கிருஷ்ண பகவான் அளிக்கும் விளக்கங்கள், நம் எல்லோருக்கும் தெளிவு ஏற்படுத்தக் கூடியவை. அரும்பெரும் தத்துவங்களை ஆரம்ப வகுப்பு மாணவனுக்குப் புரிய வைப்பதுபோல், படிப்படியாக பதினெட்டு அத்தியாயங்களில் விளக்குவார் கிருஷ்ணர்.
நீயும் ஒரு அர்ஜுனன்தான் என்ற தலைப்பில், சக்தி விகடன் இதழில் இளைஞர் சக்தி பகுதியில் சுவாமி சந்தீப் சைதன்யா எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இதில், படிப்பவர்களின் மனதில் பதியும் வண்ணம் எளிய நடையில் பகவத் கீதையின் சாரத்தைப் பிழிந்து கொடுத்திருக்கிறார் நூலாசிரியர். முக்கியமான சுலோகங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றின் பொருளையும் விளக்குவதோடு, அவற்றைப் புரிந்து கொள்வதற்கு வசதியாக சின்னச் சின்னக் கதைகளையும் கொடுத்திருப்பது இதன் சிறப்பு.
ஒரு முறை படித்துவிட்டு, புத்தக அலமாரியில் வைத்துவிடக் கூடிய நூல் அல்ல இது. எப்போதும் கைவசம் வைத்துக் கொண்டு, நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் ஒரு முறை எடுத்துப் படித்து நம் சிந்தையைப் புதுப்பித்துக் கொள்ள இது உதவும். பகவத் கீதை முதியோருக்கு மட்டுமே உரித்தானது என்ற மாயையை விலக்கி, இளைஞர் சமுதாயமும் இதைப் படித்து பயன்பெறலாம் என்பதை தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது இந்த நூல்.