விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
சிறுவயதில் தாயை இழப்பதோடு, உறவு வட்டத்தில் பெண் வாசனை எதுவுமின்றி வளர்ந்த கதாநாயகனுக்குள் (வைத்யநாதன்) மனைவி குறித்து விசித்திரமான ஒரு பிம்பம் உருவாகிறது. நான் ஒரு பொண்ணைக் காப்பாத்தற மாதிரி இல்லாமே என்னை ஒரு பொண்ணு காப்பாத்தற மாதிரி வாழ்க்கை அமையணும்! என்று விரும்புகிறான்.
அறிவிலும் அந்தஸ்திலும் அழகிலும் சிறந்த ஒரு பெண்ணை _ நூலாசிரியரின் வார்த்தைப்படி, நிகரற்ற ஒரு பெண்ணை _ திருமணம் செய்யவேண்டும் என்ற கனவுடன் சொந்த ஊரான குற்றாலத்திலிருந்து சென்னைக்குப் புறப்படுகிறான். அப்படிப்பட்ட நிகரற்ற ஒரு பெண்ணே (சூர்யா) அவனுக்கு மேலதிகாரியாக வாய்க்கிறார்.
நண்பர்களின் துணையுடன் வைத்யநாதன், சூர்யாவைத் தன்வசப்படுத்த எடுக்கும் முயற்சிகள் இளமைத்துடிப்புடன் நாவலில் விவரிக்கப்பட்டுள்ளன. வாய் பேச முடியாத ஒரு பெண் (ஆனந்தி) கதாநாயகன் பணிபுரியும் அலுவலகத்திலேயே பணிபுரிகிறாள். அவளுக்கு வைத்யநாதன் மேல் காதல் ஏற்படுகிறது. இந்த முக்கோணக் காதல் சுழலில் யாருடைய காதல் எப்படி ஜெயிக்கிறது என்பதை விவரித்துள்ள விதம்தான் இந்த நாவலின் வெற்றிக்கு அடித்தளம்.
இது ஸ்டெல்லா புரூஸின் முதல் நாவலும் கூட. ஆனால், கன்னி முயற்சியின் சாதகமான அம்சங்களும் விரிவான வாசிப்பு அனுபவத்தின் சாதகமான அம்சங்களும் சேர்ந்து இந்த நாவலை குறிப்பிடத் தகுந்த ஒன்றாக மாற்றியுள்ளன.
திரைப்படமாக எடுக்கும் முயற்சியில் இந்த கதையை திரைக்கதையாக எழுத ஆரம்பித்ததாகவும் ஸ்டெல்லா புரூஸ் கூறியுள்ளார். கதையில் இடம் பெறும் பாத்திரங்களும் அந்தக் கோணத்தில் உரையாடவும் செய்கின்றன. ஒரு நல்ல திரைப்படமாக வடிவம் பெற வாய்ப்புள்ள நாவல்.