விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
சிறுகதைகளுக்கு மொழி, மத, இன வேறுபாடுகள் கிடையாது. அனைத்து மொழிகளிலும் காலம் காலமாக எழுதப்பட்டு வரும் சிறுகதைகளுக்கு என்றுமே ஒரு தனி வாசகர் வட்டம் உண்டு.
அதேபோல், சிறுகதைகளில் கையாளப்படாத விஷயங்களே கிடையாது. மனித உறவுகள், உணர்ச்சிகள், பாசப் போராட்டங்கள் என்று ஒரு பக்கமும், சமூக விழிப்பு உணர்ச்சிக் கதைகள், அரசியலை துகிலுரித்துக் காட்டும் கதைகள், மத நல்லிணக்கத்தைப் போதிக்கும் கதைகள் என்று இன்னொரு பக்கமும் விரிந்து கிடக்கும் களம் சிறுகதைகளுக்கு இன்று வரை உண்டு. படிப்பவர்களை வசீகரிக்கும் காதல் கதைகளுக்கும் இங்கு பஞ்சமில்லை.
தமிழ் பருவ இதழ்களில் சிறுகதைகளுக்கு என்றுமே சிறப்பான இடம் உண்டு. அவற்றைப் படித்து ரசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கையும் பெரியது! இன்று காலத்தின் கட்டாயமாக பத்திரிகைகளில் வெளியாகும் சிறுகதைகளின் எண்ணிக்கை சற்று குறைந்திருக்கலாமே தவிர, அவற்றின் தரம் குறைவது கிடையாது.
இதுவரை பத்திரிகைகளில் வெளிவராத புத்தம் புதிய சிறுகதைகளைத் தொகுத்து நூலாக வெளியிட வேண்டும் என்ற விருப்பத்தில் பிரபலமான பதினைந்து எழுத்தாளர்களைக் கேட்டபோது, அவர்கள் உடனடியாக ஒப்புக்கொண்டு மகிழ்ச்சியுடன் புதிய கதைகளை எழுதிக் கொடுத்தார்கள்.
இந்தப் பதினைந்து கதைகளுக்கு பதினைந்து ஓவியர்கள் சிறப்பாக படம் வரைந்து கொடுத்தார்கள்.
ஒரு கதைபோல் இன்னொரு கதை இல்லாமல், இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையும் வித்தியாசமானது; படிக்க சுவாரஸ்யமானது; பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட வேண்டியது!
இது ஒரு புது முயற்சி.