விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
இந்து மதத்தில் ராமாயணம், மகாபாரதம் ஆகியவை மகத்தான இதிகாசங்கள். அவற்றுக்கு அடுத்தபடியாகப் போற்றப்படுபவை புராணங்கள். அப்படிப்பட்ட புராணங்களில் பழைமையும் புனிதமும் வாய்ந்தது ஸ்ரீமத் பாகவதம்.
உலக நன்மையின் பொருட்டு பத்து அவதாரங்கள் எடுக்கிறார் மகாவிஷ்ணு. அவற்றில் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தின் விரிவான வருணனை, சிவ, ஸ்காந்த புராணத்திலிருந்து பல கதைகள் என இந்தியாவில் பழக்கத்தில் இருந்துவந்த அனைத்து ஆன்மிகக் கதைகளின் மாபெரும் தொகுப்பு ஸ்ரீமத்பாகவதம்.
முனிவர் ஒருவரின் சாபத்தினால் ஏழு நாட்களுக்குள் தான் இறக்கப்போவது நிச்சயம் என்பதைத் தெரிந்து கொள்கிறார் பரீட்சித்து மகாராஜா. மரிக்கப் போகிறவன் செய்ய வேண்டியது என்னென்ன, எது நினைக்கத்தக்கது, எது ஜபிக்கத்தக்கது, எது பஜனம் செய்யத்தக்கது என்பனவற்றைச் சொல்லி, எனது முக்திக்கு வழி கூறியருள்வீராக! என்று பயபக்தியுடன் சுகப்பிரம்ம மகரிஷியிடம் பிரார்த்திக்கிறார். அப்போது அந்த மகரிஷி சொன்னவற்றின் தொகுப்பே ஸ்ரீமத் பாகவதம்.
தொலைதொடர்பும் போக்குவரத்துவசதியும், பத்திரிகையும், இணையதளமும் இன்றைய நவீன உலகில் வளர்ந்து கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கின்றன. இப்போதுகூட ஒரு சமகால எழுத்தாளர் ஒருவரின் அனைத்து படைப்புகள் அல்லது முக்கியப் பிரமுகர் ஒருவரைப் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் ஆகியவற்றை முழுமையாகத் தொகுக்க நம்மால் முடியாமல் இருக்கிறது. அப்படியிருக்க, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் அகண்ட பாரதத்தில் புழக்கத்தில் இருந்த கதைகள், சம்பவங்கள் ஆகியவற்றை வெகு நேர்த்தியாகத் தொகுத்து வைத்திருப்பதைப் பார்க்கும்போது மிகவும் பிரமிப்பாகவே இருக்கிறது.
மூலமொழியான சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் நல்ல தேர்ச்சி பெற்றுள்ள நூலாசிரியர் சு.கிருஷ்ணஸ்வாமி இதை அனைவரும் படித்து மகிழும் வகையில் எளிய நடையில் எழுதியிருக்கிறார். இலக்கியச் சுவையை விரும்புபவர்களுக்கு மகா காவியத்தைப் படித்த உணர்வையும், ஆன்மிகச் சுவையை விரும்புபவர்களுக்கு பேரானந்த உணர்வையும் ஒருங்கே தரவல்ல இந்த ஸ்ரீமத் பாகவதத்தை, தமிழில் எளிய நடையில் வழங்குகிறது விகடன் பிரசுரம்.