விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
பேரன், பேத்திகளுக்கு உணவு ஊட்டவும், உறங்க வைக்கவும் பாட்டிகள் கதை சொல்லும் வழக்கத்தை இன்றும் நாம் காணமுடிகிறது. காரணம், விளையாட்டில் உள்ளதைப் போன்றே கதை கேட்பதிலும் ஆர்வமும், குதூகலமும் கொண்டவர்கள் சிறுவர்கள். அவர்களுக்கான தனிச் சிறப்பு வாய்ந்த, சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் கதைகள், எல்லா நாடுகளிலும் கிராமியக் கதைகளாக பாரம்பரியமாக சொல்லப்பட்டு வருகின்றன.
பல நாடுகளில் வழக்கத்தில் உள்ள சிறுகதைகளின் தொகுப்பாக ஆசிரியர் நிலா இந்நூலை எளிமையாகவும் தெளிவாகவும் எழுதியுள்ளார். இந்தச் சிறுகதைகளின் சிறப்பே, சிறுவர்களுக்கு மனமகிழ்ச்சியோடு நல்ல கருத்துகளையும் அறிவுரைகளையும் தேனோடு குழைத்த மருந்தாகக் கொடுக்கும் விதத்தில் அமைக்கப் பட்டிருப்பதுதான்.
இந்தக் கதைகள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் உகந்தவையாக அமைந்தவை. சிறுவர்களானாலும் பெரியவர்களானாலும் சிந்தனையைத் தூண்டும் விதமாக உள்ளன.
பேர் சொல்லு பேர் சொல்லு என்ற இங்கிலாந்து சிறுகதை _ சுய நலம் கொண்டவர்களுக்கு படிப்பினையாகவும், நைஜீரிய சிறுகதை பழி _ நட்புக்கு பகைவன், பொறாமை குணமே என்பதையும் உணர்த்துகின்றன. வாசனை என்ன விலை?_ ஆப்பிரிக்க சிறுகதை மற்றும் இன்னும் இன்னும் வேணும்_ ஸ்பெயின் சிறுகதை, சின்னக் குவியல்... பெரிய குவியல்... என்ற மயன் நாகரிக சிறுகதை போன்றவை, பேராசை கூடாது என்பதை வலியுறுத்துகின்றன.
படிக்கவும் சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் சிறுவர் நாடோடி சிறுகதைகளின் தொகுப்பு நூலாக, நல்ல கருத்துகளை எடுத்துக் கூறும் பொழுதுபோக்குப் பூங்காவாகத் திகழ்கிறது இந்நூல். பெரியவர்கள் படித்து மகிழவும், தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு சுவாரசியமாகக் கதைகளைச் சொல்லவும், குழந்தைகளுக்குப் பரிசளிக்கவும் இந்நூல் நிச்சயம் பயன்படும்.