பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை,(பிராட்வே) சென்னை -108. (பக்கம்:91)
"நிகழ்காலத்தை தங்கள் குழந்தைகளுக்கு அந்நியமாக்கிவிட்டு, தங்களுடைய தனிப்பட்ட இன்பங்களையும் தொலைத்துவிட்டு ஓடுகிறவர்களுக்குத் தங்கள் குழந்தைகளின் மவுன விசும்பல் கேட்பதே இல்லை... நிமிடத்திற்கு நூறு சந்தேகம் எழுப்பவல்ல குழந்தைகளுக்கு, காது கொடுப்பது பெற்றோரின் தலையாய கடமை (பக் 11) என அறிவுறுத்தும் நூலாசிரியர், "பெற்றோரின் வார்த்தைகள் குழந்தைகளின் கைகால்களைப் பிணைக்கும் சங்கிலியாக இல்லாமல் அவர்களை அலங்கரிக்கும் ஆபரணங்களாக இருக்க வேண்டும் என்பது தான் இந்நூலின் நோக்கம் (பக். 18) என பிரகடனப்படுத்தித் தன் அனுபவப் பிழிவை உளவியல் நோக்கில் வெகு யதார்த்தமாக விளக்கப்படங்களுடன் கலைநயத்தோடு இழையோடச் செய்துள்ளார். கலீல் கிப்ரானையும்,புலமைப்பித்தனையும் வளமான தன் எண்ணங்களுக்கு வலிமையாக்கி, அதிகாலையில் பரவசமூட்டும் பறவைகளின் ஒலி போல பெற்றோரின் வார்த்தைகள் குழந்தைகளுக்கு பரவசமூட்ட வேண்டும் (பக். 43) என வழிகாட்டி, "வளரும் வெறுப்பு தான் ஒருவரையொருவர் அழித்துக் கொள்ளும் வன்முறைகள் நிகழ வழிவகுத்துக் கொடுக்கின்றன (பக். 87) என எச்சரிக்கவும் தயங்கவில்லை.
எளிய கவித்துவ நடையில் படைக்கப்பட்டுள்ள இந்நூலில், "ரோஜாவை மல்லிகையாக மாற்றும் முயற்சியில் நாம் இறங்கினால் முடிவில் நம் முயற்சியும் பயனற்று பூக்களும் வாழ்வற்றுப் போகும் (89) போன்ற ஆழமான சிந்தனைகள் இளம் தம்பதியினருக்குப் பெரிதும் உதவும். "வெகுமதியாக வழங்கப்பட வேண்டிய நல்ல வழிகாட்டி நூல்.