பி.கே.பொன்னுசாமி படைத்தளித்த படுகளம் என்ற நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாக வெளிவந்துள்ளது. கொங்கு நாட்டின் மண்வாசனையோடு அம்மாக்களின் பாரம்பரிய வாழ்க்கைச் சுவடுகள் இந்நாவலில் ஆழமாகப் பதிவாகியுள்ளன. ஆனைமலைப் பகுதியிலுள்ள பள்ளிபுரக் கிராமத்தில் வசிக்கும் விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வியலை இந்நாவலில் அறிந்து கொள்கிறோம். அக்கிராம மக்களிடையே காணப்படும் முரண்பாடுகளும், போராட்டங்களும் நாவலில் உணர்ச்சி பூர்வமாகப் பின்னப்பட்டிருப்பது பாராட்டக்குரியது. கீழ்ஜாதி, மேல்ஜாதி சிக்கல், குடும்ப உறவுகளைப் பாதித்தல், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் இயல்பான கதைப்பின்னலோடு கைகோர்த்து இயங்குவது, நாவலைப் படிக்கிறோம் என்ற நிலையிலிருந்து விடுபட்டு ஒரு வாழ்க்கையை நேரில் காண்கிறோம் என்பது போன்ற பிரமிப்பை ஊட்டுகிறது. ஆசிரியர் தாம் சார்ந்த இனத்தின் ஆழமான வேர்களை அறிந்து வைத்து, மூன்று கவுண்டர் குடும்பங்களைக் கதைக்களத்தில் படைத்திருப்பது தான், இந்நூலுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி. மூலத்தை அப்படியே இயல்பான நடையில் மொழி பெயர்த்திருப்பது கூடுதலான பாராட்டைப் பெறுகிறது.
ராம.குருநாதன்