தமிழ்நாட்டில் காந்தி: 1969ல் முதல் பதிப்பாக வெளிவந்த இந்த நூல், தற்போது தான் மறு அச்சு கண்டிருக்கிறது. தென்னாப்ரிக்காவில், காந்தியின் இளமை காலத்தில், பாலசுந்தரம் என்ற தமிழன் முதன்முதலாக அவர் உதவியை நாடினார். அதுமுதல் தமிழருடன் அவர் கொண்ட அன்பு, இறுதிவரை தொடர்ந்தது. அதை, இந்த நூல் ஒரு குறும்படமாக நமது இதயத் திரையில் ஓட வைக்கிறது.
தில்லையாடி வள்ளியம்மை, நாகப்பன், நாராயணசாமி போன்றவர்களின் தியாகங்கள், இதுவரை வெளிவராத பல விவரங்கள் இந்த நூலில் உள்ளன.
1896 முதல் காந்திக்கும் தமிழகத்திற்கும் உள்ள தொடர்பு, 1946 வரை நீடித்ததை, நாட்குறிப்புகளுடன் கதையாக சித்தரித்துள்ளார் ஆசிரியர். காந்தி வலம் வந்த தமிழக ஊர்கள், கிராமங்கள், அங்கு சந்தித்த பிரமுகர்கள், நிகழ்த்திய உரைகள் ஆகியவை, நூலின் பின்னால், ஆண்டுவாரியாக பட்டியலாக தரப்பட்டுள்ளது. வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாகிரக போராட்டத்தை பற்றி படித்தால், விழிகளில் நீரை வரவழைத்து விடும். தில்லையாடிக்கும் வள்ளியம்மைக்கும் தொடர்பே இல்லை என்பது, இந்த நூலில் உள்ள உண்மை செய்திகளில் ஒன்று. நூலின் முதற்பதிப்பு பற்றியும், நூலாசிரியர் வரலாற்றையும் குறிப்பிட்டிருக்கலாம்.
– முனைவர். மா.கி.ரமணன்