தன் வாழ்க்கையில் சந்தித்த பல மனிதர்களை குணச்சித்திர வார்ப்புகளாக தீட்டிக் காட்டுகிறார் ஆத்மார்த்தி. ‘புதிய தலைமுறை’ வார இதழில், வெளியான, கட்டுரைகளின் தொகுப்பு. பழைய புத்தக கடைக்காரர், சாலையில் சாக்பீஸ் மூலம் சித்திரம் வரையும் ஓவியர், தன் உற்றார் உறவினரை போரில் பறிகொடுத்த சிலோன்காரர், சாலை விபத்தில் மகனை பறிகொடுத்த தந்தை, என, பல வகையானமனிதர்கள்.
ராணுவத்தில் சேர இருந்த மகன், சாலை விபத்தில் போனதும், தந்தை சொல்கிறார், ‘‘நாட்டுக்கு கொடுத்திருந்தால் கூட ஆறியிருக்கும்; ரோட்டுக்கு கொடுத்தது தான் ஆறவேயில்லை,’’ என. இப்படி ரத்தமும் சதையுமாக பல சம்பவங்களை பதிவு செய்து மனதை உருக்குகிறார். மிக எளிமையான மனிதர்கள் குறித்த நூலாசிரியரின் பதிவுகள், நறுக்கு தெறித்தாற்போல், இரண்டு அல்லது மூன்று பக்கங்களில் எழுதப்பட்டிருப்பது, வாசிப்பை எளிதாக்குகிறது. மறக்க முடியாத மனிதர்களை கொண்ட உரைநடைக் காவியம்!
எஸ்.குரு