அபாயவனம் நாவல், சித்தர்களின் சித்து விளையாட்டுகள் பற்றியது. சித்தர்களின் தூர தரிசன சக்தி, ஜீவசமாதி என, துவக்கத்திலேயே, வாசகனை திகிலோடு, கதைக்குள் அழைத்து செல்கிறார். பரணி, குரு என்ற இரு இளைஞர்கள் வாழ்வில் புகும், சித்தர் சிவப்பிரகாசம் என்னென்ன ஆச்சரிய நிகழ்வுகளை ஏற்படுத்துகிறார் என்பதையும், அவர்கள் தேடிச்செல்லும், சித்தரின் ஜீவசமாதியும், ஏடுகளும் கிடைத்ததா என்பதையும், இறுதிவரை பரபரப்பு குன்றாமல் எழுதி உள்ளார்.
ஒவ்வொரு அத்தியாய முன்னுரையாக, கொல்லிமலை, சதுரகிரி உள்ளிட்ட ஆன்மிக மலைகளின் சிறப்புகளையும், வன வியாசம் என்ற பெயரில், எடுத்துரைத்துள்ளார். ‘நீ எதிர்பார்க்கிற விதத்துல கடவுள் காட்சி தரலைன்னா, அவர் இல்லைன்னு பொருள் கிடையாது’ என, கேள்விக்கு பதில் அளிக்கும் விதமாக, நாவல் முழுதும் ஆன்மிகம் ஆக்கிரமித்துள்ளது.
இந்திரா சவுந்தர்ராஜன் என்றதும், வாசகர்களுக்கு ஏற்படும் எதிர்பார்ப்பை இந்த நாவலிலும் நிறைவேற்றியிருக்கிறார்.
சரண்யா சுரேஷ்