திரைப்பட பாடல்களை, வெறும் பாடல் என்று கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், தமிழ் திரைப்பாடலின் மொழி, ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தது என்பதை அறியும் அரிய பொக்கிஷமாகவே பார்க்க வேண்டும்.
தமிழ் திரைப்பாடல் வரலாற்றில், கவிஞர் வாலிக்கென தனித்த இடம் உண்டு. மூன்று தலைமுறை கதாநாயகர்களுக்கும் திரைப்பாடல் எழுதியதால், அவரின் தமிழ், தலைமுறை கடந்தும் பாராட்டப்படுகிறது.
அப்படி தனிச்சிறப்பு பெற்ற வாலியின் பன்முகத் தன்மையை, இப்புத்தகம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. கவிஞர் கண்ணதாசனின் அரசியல் நிலைப்பாடு மாறிய போது, எம்.ஜி.ஆருக்கான ஆஸ்தான கவிஞராக, விஸ்வநாதன் -ராமமூர்த்தி இரட்டையர்களால் அறிமுகப் படுத்தப்பட்ட வாலி, பின்னர், ஒட்டுமொத்த சினிமா உலகில் சிறப்புமிக்க பாடலாசிரியராக எவ்வாறு வளர்ந்தார் என்பதை, இப்புத்தகத்தின் மூலம் அறிய முடிகிறது.
குறிப்பாக, சொற்களை கையாளும் விதம், சூழ்நிலையை தனக்குரியதாக மாற்றிக் கொள்ளும் பாங்கு, வார்த்தைகளில் விளையாடும் லாவகம் போன்றவற்றை பல்வேறு நிகழ்வுகளின் மூலம் இப்புத்தகம் விளக்குகிறது. கவிஞர் வாலி எழுதிய, ‘நானும் இந்த
நூற்றாண்டும், நானும் எம்.ஜி.ஆரும்’ போன்ற நூல்களில் இருந்து பல்வேறு சம்பவங்களை தொகுத்து எழுதினாலும், வாலியின் அறியப்படாத முகம், இதில், நுட்பமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, அவருடைய சமயோஜித அறிவுகூர்மை, இதில் அறிய முடிகிறது. ஒருமுறை, திரைப்பட படப்பிடிப்பு ஒன்றில், நடிகர் ரஜினியோடு, கவிஞர் வைரமுத்துவும், வாலியும் பேசிக் கொண்டிருந்தனராம். அப்போது ரஜினி, ‘சிங்கமும், புலியும் ஒன்றாக சேர்ந்து வந்திருக்கிறீர்களே’ என்றாராம். உடனே வாலி, ‘இதில் யார் சிங்கம், யார் புலி என, சொல்லுங்கள் பார்க்கலாம்’ என்றாராம்.
அங்கிருந்த அனைவரும், அதிர்ச்சியில் உறைந்து விட, ‘நான் தான் சிங்கம்’ என, வாலி சொன்னாராம். ஏனெனில், தாடி வைத்திருக்கும் தான் தானே சிங்கமாக முடியும் என்ற அவருடைய பதிலை கேட்டு, படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரும் மெய் சிலிர்ந்து போயினராம். இப்படி, மிகவும் சுவாரஸ்யமான பல்வேறு தகவல்கள், இந்த புத்தகத்தில் அடங்கி உள்ளன. ஒவ்வொரு காலகட்டத்திலும், தமிழ் திரைப்பட பாடல்கள் எப்படி நகர்ந்தன, எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தன, அதில் என்னென்ன மாற்றங்கள் நடந்தன என்பதை அறிய, இப்புத்தகம், வாலியின் வழியாக துணை புரிகிறது. திரைப்பட பாடலாசிரியராக விரும்பும் இளைய தலைமுறையினர் மட்டுமின்றி, ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.
அ.ப.இராசா