கி.பி.,19ம் நூற்றாண்டில் நடந்த பிரஞ்சு புரட்சிக்கு பின்னர், உலக அளவில் தொழிலாளர்களின் உரிமை குரல்கள், ஓங்கி ஒலிக்க துவங்கியது. அதன் ஒரு பகுதியாக, 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில், தமிழகத்திலும் தொழிலாளர் நலன், அவர்களின் முக்கியத்துவம், வாழ்நிலை, துன்பத்துக்கான காரணம், அதற்கான மீட்சி போன்றவை குறித்த கருத்தாடல்கள் எழ துவங்கின.
திரைப்படம், இலக்கியம், நாடகம் போன்ற கலை வடிவங்களிலும் அவை எதிரொலித்தன. அவ்வாறு, 20ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட மரபு கவிதை, புது கவிதை,. ஹைக்கூ கவிதை, சினிமா திரைப்பட பாடல்கள் ஆகியவற்றில், தொழிலாளர்கள் உரிமைகள் எவ்வாறு சித்தரிக்கப்பட்டுள்ளன என்பது குறித்து ஆய்வு செய்யும் நூல் இது.
நாடறிந்த பேச்சாளரான குமரி அனந்தன், அனந்த கிருஷ்ண நாடார் என்ற தன், சொந்த பெயரில், மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில், முனைவர் பட்டத்துக்காக மேற்கொண்ட ஆய்வின், புத்தக வடிவமே இந்நூல். 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் எழுதப்பட்ட பெரும்பாலான கவிதைகளில், ஆண்டை – அடிமை, முதலாளி – தொழிலாளி பிரச்னைகள் பேசப்பட்டுள்ளன.
ஆண்,பெண் பேத பிரச்னையை விட, இந்த பிரச்னைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விவசாய தொழிலாளர்கள் பட்டபாடு, முதன்மை பெறுகிறது. அதே காலகட்டத்தில், தமிழகத்தில் இடதுசாரி கருத்தியல் பரவலானதால், 90 சதவீத கவிதைகளில், இடதுசாரி கருத்தியல் எதிரொலிப்பதை அறிய முடிகிறது. பாரதி துவங்கி, மு. முருகேஷ் வரைக்குமான கவிஞர்களின் கவிதைகளை, நூலாசிரியர் ஆய்வு செய்திருப்பதால், ஒரு காலத்தில், பெரும்பாலான கவிஞர்களின் மையப்பொருளே, தொழிலாளர் நிலை சார்ந்த உணர்வுகள் ஆக்கிரமித்திருந்ததை அறிய முடிகிறது.
தொழிலாளர்களின் அடிமை வாழ்வுக்கு, ஜாதி, மதம், நிறம் என்ற வேறுபாடுகள் இல்லை. பொருளாதாரத்தில் பின் தங்கினர் என்ற காரணத்துக்காகவே, அவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. சுரண்டப்படும் தொழிலாளர்கள் ஒன்று திரண்டால், புரட்சி சாத்தியம் என்பதையும், இந்த நூல் சொல்லாமல் சொல்கிறது. புத்தகத்தை படித்து முடிக்கும் போது, ஒரே ஒரு கருத்து மட்டும் மனதில் எஞ்சி நிற்கிறது: காலம் காலமாக தொழிலாளர் பிரச்னைகளின் வடிவங்கள் மட்டுமே மாறி உள்ளன; ஆனால், பிரச்னைகள் எப்போதும் போல் நிலைத்திருக்கின்றன. அதற்கு, ௨௦ம் நூற்றாண்டும் விதிவிலக்கல்ல.
– அ.ப.இராசா