இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில், ஆரிய சமாஜத்தை நிறுவிய சுவாமி தயானந்த சரஸ்வதியை பற்றியது இந்த நூல். 1824ல் குஜராத்தில் பிறந்த அவர், வடமொழி கற்று தேர்ந்து, வடமாநிலங்கள் முழுவதும் பயணம் செய்து, மக்களுக்கு அறவழியை போதித்தார்.
அதற்காக, அவர் தன், 48வது வயதில் இந்தி மொழியை கற்று மக்களிடம் அவர்களது மொழியில், எளிய நடையில் பேசியும், எழுதியும் வழிகாட்டினார். அனைவரும் இந்தி மொழியை தெரிந்துகொள்ள வேண்டும்; அதன் மூலம், ஒற்றுமை ஏற்படும் என்று அவர் உறுதியாக நம்பினார். அதனால், அவர் படைப்புகளை இந்தி மொழியில் எழுதியது மட்டுமின்றி, ஆங்கிலம் உட்பட எந்த பிராந்திய மொழியிலும் அதை மொழிபெயர்க்க அனுமதிக்கவில்லை. கிட்டத்தட்ட, 40 நூல்கள் அவர் எழுதியுள்ளார்.
சுவாமிகளின் வாழ்க்கை, இந்திய சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டு, வேத, உபநிடதங்களுக்கு உரை எழுதியது என, அவரைப் பற்றிய பன்முக பார்வை கொண்டது இந்த நூல். குறிப்பாக, அவரின் இலக்கிய கொடையை பற்றி, அழகாக விவரிக்கிறது.
திருநின்றவூர் ரவிகுமார்