படைப்புகளை தாயாக உருவாக்குகிறார், படைப்பாளர். தன் படைப்பு குழந்தைகளை பெறுவதும், பெயர் சூட்டி மகிழ்வதும், உலாவவிட்டு புகழ்மாலை பெற வைப்பதிலும், தாயாக நிற்கிறார் படைப்பாளர். ஆனால், தன் படைப்புகள் மட்டுமின்றி, எல்லா படைப்பாளர்களுக்கும் தாயாக, அவரை சமூகத்திற்கு அறிவிக்கும் தந்தையாக இருந்து, தமிழ் வளர்த்தவர், ‘இலக்கிய வீதி இனியவர்!’
விநாயகநல்லூரில் விவசாய குடும்பத்தில் பிறந்த லட்சுமிபதி, வளர்ந்து, எழுத்தாளராய் உயர்ந்து, இலக்கிய அமைப்பாளராய் சிறந்த வாழ்க்கை வரலாற்றை, இந்த நூல் வரலாற்று தடயமாய் விளக்குகிறது.
‘மாணவர் குரல்’ இதழில், முதலில் எழுதிய சிறுகதையே, 50 ரூபாய் பரிசு பெற்றது. பின், ‘கண்ணன்’ சிறுவர் இதழில், ‘பொன்மனம்’ வெளிவந்தது. ஆனந்த விகடனில் அனுப்பிய முதற்கதையே வெளிவந்து, இவர் எழுத்துக்கு முத்திரை கிடைத்தது.
குழந்தை இலக்கியக் கருத்தரங்கம், எழுத்தாளர் மாநாடு போன்றவை நடத்தி, எழுத்தாளர்களை ஒருங்கிணைக்கும் ஆற்றல் பெற்று, பல்வேறு படைப்பாளர்களை, தமிழ் உலகிற்கு அறிமுகம் செய்தவர்.
‘இலக்கிய வீதி, கம்பன் கழகம்’ போன்ற அமைப்புகளை எடுத்து நடத்தி, அதன்வழி ஆற்றல்மிக்க எழுத்தாளர், பேச்சாளர், பதின்கவனகர்களை அடையாளப்படுத்தியவர் இவர்.
‘வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம்’ என்ற முத்தாய்ப்பு வரிகளை முழக்கிய கவிஞர் தாராபாரதியை உலகறிய செய்தவர். பதின்கவனகர், பார்வையற்ற ராமையா பிள்ளையை, உலகம் திரும்பிப் பார்க்குமாறு செய்தவர் இவர். ‘அவதானம்’ எனும் கவனகக் கலைக்கு மறுவாழ்வு தந்தவர். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் நாடுகள் சென்று தமிழ் வளர்த்தவர். தன்னையும், தன் படைப்புகளையும் வளர்ப்பவர், இயல்பானவர். தமிழையும், தமிழ்ப் படைப்பாளர்கள் யாவரையும் வளர்ப்பவர், ‘இலக்கிய வீதி இனியவர்!’
ராணிமைந்தன், தன் இனிய மொழிகளால், இந்த நூலை ஆக்கியுள்ளார். இது, இனியவரின் இனிய வரலாறு.
– மா.கி.ரமணன்