இந்த நாவல், ஒரு வளர்ப்பு தாயின் பாசத்தையும், அவள் வாழ்வின் வேதனைகளையும் பேசுகிறது. அவள் வளர்த்த குழந்தைகளின் அன்புக்காக, தன் கடந்த கால வாழ்வை துன்ப மயமாக்கியோரை, மன்னிக்கவும் தயாராகிறாள் அந்த அன்னை. இந்த நூலில் இடம்பெறும் மற்றொரு நாவலான, ‘காற்றோடு போராடும் பூக்கள்’ – கீழ்த்தட்டு மக்களின் வாழ்வை சித்தரிக்கிறது.
தந்தையின் குடிப் பழக்கத்தால், மகளின் கற்பே பறிபோகும் நிலை. அதிலிருந்து கதாநாயகி மீண்டாளா, அவளின் வாழ்க்கை லட்சியம் நிறைவேறியதா என்பது குறித்து உருக்கமாக சொல்லப்பட்டுள்ளது. ‘கண்ணீர்த் துளிவர உள் உருக்குதல்’ என்ற கலையில், வல்லவராக இருக்கிறார், ஸ்ரீஜா வெங்கடேஷ். பல பெண்களுக்கு, வாழ்க்கையே போராட்டமாக அமைந்து விடுகிறது. ஆனால், அந்தப் போராட்டங்களையும், மன உளைச்சல்களையும் மீறி, பெண்கள் ஜெயித்துக் கொண்டு தான் இருக்கின்றனர் என்பதை, இந்த இரண்டு குறுநாவல்களும் பேசுகின்றன. கதாசுவாரசியமும், கருத்தாழமும் உள்ள கதைகள்.
எஸ்.குரு