‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது போல, ஒரு நூலின் பெருமையை, அந்த நூலின் முன்னுரையே கூறிவிடும். திருக்குறளுக்கு அந்நூலின் முதலில் பாயிரமாக உள்ள நான்கு அதிகாரங்களும், சிலப்பதிகாரத்திற்கு அதன் பதிகமும், கம்ப ராமாயணத்திற்கு அதன் பதிகமும் அழகு செய்து, அந்த நூல்களின் சிறப்பை கூறுகின்றன.
திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் எழுதிய நூல்களின் சிறப்பை, அந்த நூல்களுக்கு, சுவாமிகள் எழுதியுள்ள முன்னுரைகளால் அறியலாம். நூலின் மொத்தக் கருத்துக் களையும், சில பக்கங்களே உள்ள முன்னுரையே தெரிவித்து விடும். இந்த நூலில், பெரும்பாலும் வாரியார் சுவாமிகள் எழுதியுள்ள நூல்களின் முன்னுரைகளும், பிறர் எழுதிய சில நூல்களின் அணிந்துரைகளும் உள்ளன.
இவற்றைப் படித்தாலே, பல நூல்களின் திரண்ட கருத்தைப் படித்த மன நிறைவு ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக, ‘கம்பன் கவிநயம்’ என்ற நூலில், கந்தபுராணம் - சிவ நூல், மகாபாரதம் - அற நூல், பெரியபுராணம் - அருள் நூல், சிலப்பதிகாரம் - விதி நூல், சீவக சிந்தாமணி - இன்ப நூல், ராமாயணம் - அன்பு நூல் என, வாரியார் சுவாமிகள் கூறுவது எவ்வளவு உண்மை என்பதை, அந்த நூல்களை படித்தோர் நன்கு உணர்வர். (பக். 130).
இந்த நூலை படித்தால், வாரியார் சுவாமிகள் இவ்வளவு நூல்கள் எழுதியுள்ளாரா என்றே வியக்கிறோம். எடுத்துக்காட்டாக, ‘மார்கழிப் பாராயணம், இமாலய யாத்திரை, நேபாள யாத்திரை’, ஆகிய நூல்களைப் பலரும் அறியமாட்டார்கள். (பக். 108, 137, 147).
இந்த நூலில், வாரியார் சுவாமிகளின் வெண்பாக்கள் பலவும், அருணகிரிநாதர், பட்டினத்தார் போன்றோரின் பாக்கள் சிலவும் படித்தால், நம் மனத்தில் கவிதையின்பம் பெருகுவதைக் காணலாம்.
பலமுறை படித்த பின்னர், பாதுகாத்து வைக்க வேண்டிய அருமையான நூல்.
டாக்டர் கலியன் சம்பத்து