ஒரு பொருள் பற்றிய இருபத்து மூன்று அறிஞர்களின் கட்டுரை தொகுப்பு இந்த நூல். திருக்குறளில், காமத்துப்பாலின் சிறப்பு, காமமும், இன்பமும் ஒன்றா, காமம் இழிபொருளாக எப்போது மாறியது, காமம் தரும் கனிந்த வாழ்வு, காமத்துப் பாலும் கானல்வரியும், அகத்திணை மரபும், காமத்துப்பாலும் எனப் பல்வேறு தலைப்புகளில், திருக்குறள் கருத்துக்கள் ஆராயப்பட்டு உள்ளன.
காமம் என்பதற்கு சரியான பொருள், நூலின் முதலிலேயே, கருத்துரைகள் என்ற தலைப்பில் தரப்பட்டிருக்கிறது. ‘மனமொத்து இருபாலும் முறுகி வளர்ந்து பெருகி நிற்கும் பேரன்பே காமம் என்பதாகும். பின்னாளில், ‘காமம்’ என்ற சொல், தன்பெருமைப் பொருளை இழந்து சிறுமைப்பட்டதாகக் கருதப்பட்டமையால், இன்பத்துப்பால் என்னும் பெயர் கொண்டதாம்... திருக்குறளில், காமம் என்னும் சொல், 39 இடங்களில் ஆளப்பட்டுள்ளது. இன்பம் என்னும் சொல், இரண்டு இடங்களில் மட்டுமே இடம் பெற்றுள்ளது. அவ்விரண்டு இடங்களிலும் காமம் என்னும் சொல்லும் வருகின்றது’ என்ற, முதுமனைவர் இரா.இளங்குமரனாரின் மேற்கோள்,
குறிப்பிடத்தக்கது. (பக்.6). தாய்ப்பாலின் சிறப்பு, இன்றைய வாழ்வியலுக்கு வள்ளுவரின் வழிகாட்டல், காமத்துப்பால் அமைப்புமுறை போன்ற அரிய செய்திகளும் நூலுக்குச் சிறப்பூட்டுகின்றன. ஆய்வாளர்கள், தமிழ் அன்பர்கள் படித்து மகிழ, அறியத்தக்க நல்ல நூல்.
கவிக்கோ ஞானச்செல்வன்